2014-02-11 15:42:10

சமயத்தை அரசியலில் நுழைக்க வேண்டாம், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆயர்கள்


பிப்.11,2014. முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ள மோதல்களில் சமயத்தை நுழைக்க வேண்டாம் என மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் சமயத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் கத்தோலிக்கப் பேராயர் Dieudonné Nzapalainga, இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் தலைவர் பாஸ்டர் Nicolas Guerékoyame Gbangou, அந்நாட்டின் முஸ்லிம் சமூகத் தலைவர் Oumar Kobine Layama ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

எப்பொழுதும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் சமயப் போரைத் திணிப்பதற்கு விரும்புகின்றனர் எனவும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 80 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், 10 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் மற்றும் 10 விழுக்காட்டினர் இயற்கையை வழிபடுபவர்கள் என்பதை நினைவுபடுபத்த விரும்புவதாகவும் Bangui பேராயர் Nzapalainga அக்கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், முற்றிலும் அரசியல் நோக்கத்துடன் இடம்பெறும் தற்போதைய சண்டையில் சமயத்தை நுழைப்பதற்குக் காரணமே கிடையாது என்று முஸ்லிம் குரு Layama கூறினார்.

பெரும் குழப்ப நிலையிலுள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், கடந்த ஞாயிறன்று கூட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் :Fides








All the contents on this site are copyrighted ©.