2014-02-10 16:07:18

திருத்தந்தையின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை


பிப்.10,2014. இயேசு எனும் ஒளியை அனைவருக்கும் எடுத்துச்செல்லும்பொருட்டு ஒவ்வொரு கிறிஸ்தவரும் அனணைந்துபோன விளக்குகளாக இல்லாமல், ஒளிர்விடும் விளக்குகளாக செயல்படவேண்டும் என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் சீடர்களை நோக்கி இயேசு 'நீங்களே உலகின் உப்பு, நீங்களே உலகின் ஒளி' என கூறியபோது, நீங்கள் ஏழையரின் உள்ளத்தோராய், கனிவுடையோராய், தூய்மையான உள்ளத்தோராய், இரக்கமுடையோராய் இருந்தால் நீங்கள் உலகின் ஒளியாகவும் உப்பாகவும் விளங்குவீர்கள் என்பதையே குறிப்பிட்டார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்து மனிதகுலத்திற்கும் பணிபுரிவதற்கான அழைப்பைப் பெற்றுள்ள கிறிஸ்தவர்கள், இவ்வுலகில் வாழும் நற்செய்தியாக இருக்ககும்படியாக எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வாழ்வை நாம் மேற்கொள்வதன் மூலம் நம்மை சுற்றியிருப்பவற்றில் உப்பாகச் செயல்பட்டு அவற்றை கெடாமல் பாதுகாக்கமுடியும் எனவும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.
உண்மை பிறரன்பிற்கு நாம் சாட்சிகளாக விளங்குவதன் மூலம் உலகின் ஒளியாக விளங்கமுடியும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் நமக்கு வழங்கியுள்ள ஒளியை மற்றவர்களுக்கும் வழங்குபவர்களாக செயல்படுவோம் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், இச்செவ்வாயன்று உலக நோயாளர் நாள் சிறப்பிக்கப்படுவதை நினைவூட்டி, கிறிஸ்துவைப்போல் நாமும் நோயாளிகள் மீது அன்புடையவர்களாகச் செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.
நோயாளிகளைக் கவனித்துவரும் நலப்பணியாளர்களுக்கும், குடும்பங்களுக்கும் தன் நன்றியை வெளியிட்டதோடு, செப உறுதியையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.