2014-02-10 16:21:56

இந்தியத் திருஅவையில் 'குணமளிக்கும் திருப்பணி வாரம்'


பிப்.10,2014. இந்தியாவின் கிறிஸ்தவ சபைகள் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடும் 'குணமளிக்கும் திருப்பணி வாரம்' இத்திங்கள் முதல் வரும் ஞாயிறுவரை சிறப்பிக்கப்படுகிறது.
இந்தியக் கிறிஸ்தவ மருத்துவக்கழகம், இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை மற்றும் கத்தோலிக்க நலஆதரவு கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த குணமளிக்கும் திருப்பணி வாரத்திற்கு, 'பெண்கள் - குணமளிக்கும் திருப்பணியில் தலைவர்கள்' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
குணப்படுத்தும் உன்னதப் பணியில் பெண்களின் பங்கை விவிலியம் தெளிவாக எடுத்துரைப்பதாக கிறிஸ்தவ சபைகள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளன.
மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அவரவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து கூட்டுச்செபங்களில் பங்குகொள்ள வாய்ப்பளிப்பது, நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்வது போன்றவை இவ்வாரத்தின் திட்டமிடப்பட்டுள்ள செயல்பாடுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குதள அளவிலும் திருவழிபாட்டுக்கொண்டாட்டங்கள், நோயிற்பூசுதல், நல ஆதரவுக் கருத்தரங்குகள், மருத்துவ முகாம்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவைகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 11, இச்செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் லூர்து நகர் புனித மரியன்னைத் திருவிழாவன்று, கத்தோலிக்க திருஅவையில், உலக நோயாளிகள் நாள் சிறப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CBCI








All the contents on this site are copyrighted ©.