2014-02-08 15:52:21

வளர்ச்சித் திட்டங்களின் சலுகைகளை அனைத்து மனிதரும் பெற வேண்டும், பேராயர் சுள்ளிக்காட்


பிப்.08,2014. மனித வரலாற்றில் முன்பு இருந்ததைவிட இக்காலத்தில் மக்களுக்கு இடையேயும், மக்கள் மத்தியிலும் பொருளாதார சமத்துவமின்மை அதிக அளவில் காணப்படும்வேளை, உலகின் வளர்ச்சித் திட்டங்களின் நன்மைகளை மனிதக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பெறுவற்கு உறுதி செய்யப்பட வேண்டும் என வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட இலக்குகள் குறித்த ஐ.நா. கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட், உறுதியான, நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சி மூன்று இன்றியமையாத் தூண்கள் மீது தனது அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றன எனக் கூறினார்.
இந்த வளர்ச்சித் திட்டச் சலுகைகளில் எந்த மனிதரும் ஒதுக்கப்படக் கூடாது எனவும், உலகளாவிய சமத்துவமின்மை பொருளாதார அல்லது நீதித் துறைகளில் மட்டுமல்லாது, இது முழு மனிதக் குடும்பத்தையுமே நெருக்கடிக்கு உட்படுத்தியுள்ளது எனவும் எச்சரித்தார் பேராயர் சுள்ளிக்காட்.
மனித மாண்பு மறுக்கப்படுகிறவர்களில் பெண்களும் சிறுமிகளும் முதலிடத்தில் உள்ளனர் எனவும் ஐ.நா. கூட்டத்தில் உரைத்த பேராயர் சுள்ளிக்காட், வீட்டு வன்முறை, பாலியல் வன்செயல்கள், கட்டாயத் திருமணம், மனித வியாபாரம், பெண் பிறப்புறுப்புக்கள் முடமாக்கப்படுவது, கல்வி மறுக்கப்படுவது போன்றவற்றையும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.