2014-02-08 14:02:07

புனிதரும் மனிதரே - யாரும் புனிதராகப் பிறப்பதில்லை


இத்தாலி நாட்டின் சிசிலியில், காலணிகள் செய்யும் ஒரு தொழிலாளியின் மகனாக, 1605ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பிறந்தவர் பிலிப்போ லத்தீனோ (Filippo Latino). இளவயதிலேயே தந்தையை இழந்த இவர், கத்திச் சண்டையில் தேர்ச்சிபெற்று, ஒரு படைவீரரானார். கடவுள் பக்தி அதிகம் இல்லையெனினும், வயது முதிர்ந்தோர் மற்றும் வலுவற்றோர், வன்முறைகளுக்கு உள்ளாகும்போது, பிலிப்போ, தனது கத்திச் சண்டைத் திறமையால் அவர்களைக் காப்பாற்றினார். மிக எளிதில் கோபம்கொள்ளும் குணம் படைத்த பிலிப்போ, கத்தியும், கோபமும் ஆபத்தான இணைப்பு என்பதை தன் 19வது வயதில் உணர்ந்தார். ஒரு முறை நடைபெற்ற கத்திச் சண்டையில், தன் எதிராளியின் கரத்தை வெட்டிவிட்டார்.
தன் குற்றத்திற்குப் பரிகாரமாக கப்பூச்சியன் துறவு மடத்தில், பெர்னார்ட் என்ற பெயருடன், ஓர் எளிய சகோதரராக இணைந்தார். புனித பிரான்சிஸ் அசிசியார் மீது அதிகப் பற்றுள்ள இவர், மிகக் கடினமான தவமுயற்சிகளை மேற்கொண்டார். கடினமான ஒரு குறுகியப் பலகையில் இரவு மூன்று மணி நேரங்களே உறங்கினார். ரொட்டித் துண்டும், நீருமே இவரது உணவானது.
ஒருநாள், குழந்தை இயேசுவுடன் இவருக்குத் தோன்றிய மரியன்னை, இவர் கையில் குழந்தை இயேசுவைக் கொடுத்தார். இவரது மரண நாளை நான்கு மாதங்களுக்கு முன்பே இவரிடம் கூறினார். இவருக்கு முன்னறிவிக்கப்பட்டவாறே, 1667ம் ஆண்டு சனவரி 12ம் தேதி இவர் இறைவனடி சேர்ந்தார்.
சகோதரர் பெர்னார்டின் புண்ணிய வாழ்வால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். அவரது இறுதி சடங்கில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவரது கல்லறை பல புதுமைகளுக்குக் காரணமாக அமைந்தது. இவர் இறந்த நூறாவது ஆண்டு, முத்திபேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார். 2001ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், Corleoneன் பெர்னார்டைப் புனிதராக உயர்த்தினார். யாரும் புனிதராகப் பிறப்பதில்லை. யாருக்கும் மனமிருந்தால் மனமாற்றமிருந்தால், புனிதராக இறக்க முடியும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.