2014-02-07 15:31:20

இத்தாலியில் குடியேற்றதாரர்கள் பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றனர், இத்தாலிய காரித்தாஸ்


பிப்.07,2014. இத்தாலிக்கு வரும் குடியேற்றதாரர்கள் அந்நாட்டின் பல பகுதிகளில் பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றனர் என்று இத்தாலிய ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுவும், இத்தாலிய காரித்தாஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.
அடக்குமுறைகளுக்கு அஞ்சியும், தரமான வாழ்வைத் தேடியும், நிறைந்த எதிர்பார்ப்புகளுடனும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறுகின்றனர், ஆனால் அவர்கள் குடியேறும் நாடுகளில் ஏமாற்றத்தை எதிர்நோக்கி மனித மாண்பையும் இழக்கின்றனர் என்று அவ்வறிக்கையை வெளியிட்ட ஆயர் Giuseppe Merisi கூறினார்.
இதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய, இத்தாலிய காரித்தாஸ் நிறுவனத்தின் குடியேற்றதாரர் அலுவலகத் தலைவர் Oliviero Forti, சுட்டெரிக்கும் வெயிலில் 300 கிலோ கிராம் தக்காளிப்பழங்களைச் சேகரிப்பதற்கு குடியேற்றதாரர் 3.5 யூரோக்களையும், ஆவணங்கள் இல்லாதவர்கள் 2.5 யூரோக்களையும் பெறுகின்றனர் என்று கூறினார்.
ஐ.நா.வின் கணிப்புப்படி, உலக அளவில் 2012ம் ஆண்டில் 23 கோடியே 20 இலட்சம் பேர் தங்கள் நாடுகளைவிட்டு வேறு நாடுகளுக்குச் சென்றனர், ஆனால் இவ்வெண்ணிக்கை 2000மாம் ஆண்டில் 17 கோடியே 50 இலட்சமாக இருந்தது எனத் தெரியவந்துள்ளது.
இத்தாலியில் 2013ம் ஆண்டில் ஏறக்குறைய 45 இலட்சம் வெளிநாட்டவர் வாழ்ந்தனர். இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட 8 விழுக்காடு அதிகம்.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.