2014-02-06 16:15:24

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருப்பீடம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஐ.நா.வின் சிறப்புக் குழு சரிவர புரிந்துகொள்ளவில்லை - பேராயர் Tomasi


பிப்.06,2014. சிறுவர் சிறுமியருக்கு எதிராக திருஅவை பணியாளர்களால ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகளைக் களைவதற்கு, திருஅவை தகுந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றும், இத்தகையக் கொடுமைகள் மீண்டும் நிகழாதவண்ணம் ஒழுங்கு முறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
குழந்தைகளின் உரிமைகள் குறித்த ஆய்வை மேற்கொண்ட ஐ.நா.வின் சிறப்புக் குழு ஒன்று, தன் 65வது அமர்வுக்கு இறுதியில், அறிக்கையொன்றை இப்புதனன்று வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையில் காங்கோ, ஜெர்மனி, போர்த்துகல், இரஷ்யா, ஏமன் ஆகிய நாடுகளிலும் வத்திக்கானிலும் குழந்தைகள் உரிமைகள் எந்நிலையில் உள்ளதென்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிக்கைக்குப் பதில் அளிக்கும்வண்ணம், திருப்பீடத்தின் சார்பில், ஐ.நா.வின் நிரந்தரப் பார்வையாளராகச் செயலாற்றும் பேராயர் Silvano Maria Tomasi அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், திருப்பீடம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை இவ்வறிக்கை சரிவர புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது என்று கூறினார்.
திருப்பீடம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வேறு எந்த நாட்டிலும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை என்றும் பேராயர் Tomasi அவர்கள் தெரிவித்தார்.
குழந்தைகள் உரிமைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்ட இந்த ஐ.நா. குழு, கருத்தடை, ஒரே பாலின உறவு ஆகியவற்றில் திருஅவையின் நிலைப்பாடு குறித்து இவ்வறிக்கையில் கேள்விகள் எழுப்பியிருப்பது, வருத்தத்திற்குரியது மற்றும் தேவையற்றது என்று பேராயர் Tomasi அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா.வின் குழு வெளியிட்டுள்ள இவ்வறிக்கைக்குப் பதில்தரும் வகையில் திருப்பீடமும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் திருஅவை தளராமல், தீவிரமாக மேற்கொள்ளும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.