திருத்தந்தையின் மறையுரை - நமது வாழ்வை நம்பிக்கையுடன் இறைவன் கரங்களில் ஒப்படைப்பது
மிக உயர்ந்ததொரு கொடை
பிப்.06,2014. திருஅவையின் உறுப்பினராக இறப்பது, நம்பிக்கையோடு இறப்பது, மற்றும் கிறிஸ்தவ
சாட்சியாக இறப்பது என்ற மூன்று கருத்துக்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன்
காலையில் தன் திருப்பலி மறையுரையாக வழங்கினார். மன்னன் தாவீதின் இறப்பைக் குறிப்பிடும்
இன்றைய முதல் வாசகத்தை மையப்படுத்தி புனித மார்த்தா இல்லத்தில் வழங்கிய மறையுரையில்,
தன் மக்களுக்கு மத்தியில் தாவீது இறந்ததையும், தான் ஒரு பாவி என்பதை உணர்ந்தாலும், நம்பிக்கையோடு
இறைவனடி சேர்ந்ததையும் திருத்தந்தை குறிப்பிட்டார். மரணத்திற்குப் பின் நமது தந்தை
நம்மை வரவேற்கக் காத்திருக்கிறார் என்ற உணர்வுடன் நமது வாழ்வை நம்பிக்கையுடன் அவர் கரங்களில்
ஒப்படைப்பது மிக உயர்ந்ததொரு கொடை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அத்தகையக் கொடைக்காக
மன்றாடுவோம் என்று கூறினார். ஒவ்வொருவரும் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, மக்களை
விட்டுச் செல்லுதல், ஒரு மரத்தை நடுதல், ஒரு புத்தகத்தை எழுதி விட்டுச் செல்லுதல் என்று
தன் நினைவாக எதையாவது விட்டுச் செல்ல முயல்கிறோம் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை,
தாவீது தனக்குப் பின், அறிவு நிறைந்த, இறைவனுக்கு கீழ்ப்படிந்த ஒரு மகனை விட்டுச் சென்றார்
என்று கூறினார். மன்னன் தாவீதின் பரிந்துரை மூலம், நாம் திருஅவையில் இறப்பது, நம்பிக்கையோடு
இறப்பது, நல்லதொரு நினைவை விட்டுச் செல்வது என்ற மூன்று வரங்களை வேண்டுவோம் என்று தன்
மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.