2014-02-06 16:11:30

திருத்தந்தை பிரான்சிஸ் - மலிவான விலைகளுக்கு இவ்வுலகம் விற்பனை செய்யும் மகிழ்வைவிட கிறிஸ்து வழங்கும் மகிழ்வு சிறந்தது


பிப்.06,2014. 'பேறுபெற்றோர்' என்று இயேசு மலைப்பொழிவில் வழங்கிய உண்மைகளை தன் வாழ்வில் கடைபிடித்தார்; இவ்வுலகம் காட்டிய வழிகளுக்கு எதிர் சாட்சியாய் வாழ்ந்த அவரைப் போல் வாழ்வது நமக்கு முன் உள்ள சவால் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வாண்டு ஏப்ரல் 13ம் தேதி, குருத்து ஞாயிறன்று கொண்டாடப்படும் 29வது உலக இளையோர் நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பெயரால் முதன்முதலாக வெளியிட்டுள்ள இளையோர் நாள் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளை மீண்டும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்த திருத்தந்தை, அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்கு, 'பேறுபெற்றோர்' என்று ஆரம்பித்து, இயேசு கூறிய மூன்று உண்மைகளை தன் செய்திகளின் மையக்கருத்தாக வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது” என்பது இவ்வாண்டுக்கான கருத்து என்றும், “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” என்பது, 2015ம் ஆண்டுக்கான கருத்து என்றும் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, 2016ம் ஆண்டு போலந்து நாட்டின் Krakow நகரில் நடைபெறும் இளையோர் நாளன்று “இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” என்பது மையக்கருத்தாக அமையும் என்று தன் செய்தியில் அறிவித்துள்ளார்.
மலிவான விலைகளுக்கு இவ்வுலகம் விற்பனை செய்யும் மகிழ்வை, ஒரு விற்பனைப் பொருளாகப் பெறுவதற்குப் பதில், பரந்து விரிந்த உள்ளத்துடன் வாழ்வதால் நாம் அடையக்கூடிய மகிழ்வை, கிறிஸ்துவின் மழைப்பொழிவு நமக்குத் தருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.
"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்று கடந்த இளையோர் நாள் கொண்டாடிய மையக் கருத்தும், கிறிஸ்து அளிக்கும் 'பேறுபெற்றோர்' கருத்துக்களும் கொண்டுள்ள தொடர்பை திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன், ஏப்ரல் மாதம் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இளையோருக்கு ஒரு சிலுவையை அளித்து, இளையோர் நாளைத் துவக்கிவைத்தார் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் நினைவுறுத்தி, இவ்வாண்டு திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் புனிதராக உயர்த்தப்படும் நிகழ்வில், அவரை, இளையோர் நாள் நிகழ்வுகளுக்குப் பாதுகாவலாராகவும் நாம் கொண்டாடுவோம் என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை தன் 2014ம் ஆண்டு இளையோர் நாள் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.