2014-02-06 16:14:04

இத்தாலியின் வெனிஸ் பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் தாங்கிய வறியோர் இல்லம் திறப்பு


பிப்.06,2014. இறைவனின் மக்களுக்கு மத்தியில் வறியோருக்கு பெருமைக்குரிய ஓர் இடத்தை உருவாக்கியிருக்கும் அவரது பராமரிப்புக்கு நன்றி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலியின் வெனிஸ் பகுதியில், Marghera என்ற ஊரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் தாங்கிய ஒரு வறியோர் இல்லத்தை, திருப்பீடச் செயலர் பேராயர் Pietro Parolin அவர்கள் பிப்ரவரி 5, இப்புதன் மாலை திறந்து வைத்தார்.
இத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெனிஸ் நகர் பேராயர் Francesco Moraglia அவர்கள் வழியே வழங்கியச் செய்தியை, திருப்பீடச் செயலர் இத்தருணத்தில் வாசித்தார்.
புனித யோசேப்பு அவர்களின் பாதுகாவலில் அமைந்துள்ள இந்த வறியோர் இல்லத்திற்கு தன் பெயரை வழங்கியுள்ளதற்காக தன் நன்றியைத் தெரிவித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வில்லத்திற்குள் வரவேற்கப்படும் ஒவ்வொரு மனிதர் வடிவிலும் கிறிஸ்துவே வரவேற்கப்படுகிறார் என்று கூறினார்.
பல்லாயிரம் எளிய மனிதர்களும், கைம்பெண்களும், ஓய்வுபெற்றுள்ள மனிதர்களும் பங்குகளில் அளிக்கும் நிதி உதவியுடன் இத்தகைய இல்லங்கள் எழுப்படுகின்றன என்பதை நன்றியோடு நினைவில் கொள்வோம் என்று திருப்பீடச் செயலர் தன் உரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.