2014-02-05 14:46:19

பிப்.06,2014. புனிதரும் மனிதரே. - என்னை பிரபு என அழைப்பதே காயப்படுத்துகிறது


இஸ்பெயினின் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ் போர்ஜியார், திருத்தந்தை 6ம் அலெக்சாண்டரின் கொள்ளுப்பேரன், மன்னர் Aragonனின் Ferdinand, பேரரசர் 5ம் சார்லஸ் ஆகியோரின் நெருங்கிய உறவினர்.
பேரரசர் 5ம் சார்லஸ் அரசவையில் பணியைத் தொடங்கிய பிரான்சிஸ் போர்ஜியா, போர்த்துக்கீசிய உயர்குடிப் பெண்ணாகிய Eleanor de Castro என்பவரை 19வது வயதில் திருமணம் செய்தார். இந்தத் தம்பதியருக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தனர். பக்தியுள்ள பிரான்சிஸ் தனது 33வது வயதில் காண்டியின் பிரபுவானார்.
1546ம் ஆண்டு பிரான்சிசின் அன்பு மனைவி இறந்தார். ஒரு தந்தைக்குரியக் கடமைகளை நிறைவேற்றிவிட்டு, இயேசு சபையில் இணைந்து குருவானார் பிரான்சிஸ் போர்ஜியார்.
41 ஆண்டுகள் அரசவை வாழ்வு வாழ்ந்த பிரான்சிசின் பண்புகளைப் பல வகைகளில் பரிசோதித்தார் இயேசு சபை இல்ல அதிபர். நாட்டின் ஒரு பகுதிக்கே அதிபராக ஆட்சி செய்த இவரை, சமையல்காரருக்கு உதவிசெய்வதற்கும், அடுப்பு எரிப்பதற்கு விறகு தூக்கவும், சமையல் அறையைப் பெருக்கவும் கட்டளையிட்டார் இல்ல அதிபர். இவை அனைத்தையும் மிகுந்த தாழ்மையோடு செய்தார் பிரான்சிஸ். இயேசு சபை சகோதரருக்கு உணவு பரிமாறும்போது இவர் முழங்காலில் இருந்து தான் திறமையற்று செய்த செயல்களுக்காக மன்னிப்புக் கேட்கும்படியும் கட்டளையிடப்பட்டார். இவையனைத்தையும் முணுமுணுக்காமல் பொறுமையோடு செய்தார். இவர் கோபப்பட்டதே கிடையாதாம். தன்னை யாராவது பிரபு என்று சொல்லி மரியாதை செலுத்தினால் மட்டும் கோபப்படுவாராம். ஒருமுறை பிரான்சிசிக்கு ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மருத்துவர் நியமனம் செய்யப்பட்டார். அவர் பிரான்சிசிடம், ‘பிரபு, நான் உங்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது வேதனைப்படுத்தினேனோ’ என்று கேட்க, அதற்குப் பிரான்சிஸ் ‘சிகிச்சை எனக்கு வேதனையளிக்கவில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு நேரமும், பிரபு, மேதகு, இப்படி அடைமொழியிட்டு மிகுந்த மரியாதையுடன் அழைத்ததுதான் வேதனையளித்தது’ என்றாராம். இவ்வாறு மிகவும் பணிவுடன் நடந்து கொண்டவர் இயேசு சபை அருள்தந்தை பிரான்சிஸ்.
இயேசு சபைக்கு எல்லா இடங்களிலும் நண்பர்களைச் சம்பாதித்த பிரான்சிஸ் போர்ஜியார், அச்சபையின் மூன்றாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எவ்வளவு பெரிய பதவிகளை வகித்து வந்தாலும், இவர் ஒரு தாழ்மையான வாழ்வு வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்திலே ஒரு புனிதராகக் கருதப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.