2014-02-04 15:43:55

புனிதரும் மனிதரே - அழகும், செல்வமும் ஆண்டவனுக்கே...


மூன்றாம் நூற்றாண்டில் உரோமையப் பேரரசில், செல்வம் மிகுந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் ஆகத்தா. அழகு நிறைந்த இளம்பெண்ணாக வளர்ந்த ஆகத்தாவை மணக்க பல உயர்குடி இளைஞர்கள் விரும்பினர். அவ்விளம்பெண்ணோ தன் வாழ்வை கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்ததால், எந்த ஓர் ஆணையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
உரோமைய அரசில் உயர் பதவி வகித்த குவின்டினியன் (Quintinian) என்ற அதிகாரி, தன் ஆசைகளுக்கு இணங்க மறுத்த ஆகத்தாவை, ஒரு விலைமாதர் விடுதியில் அடைத்துவைத்தார். அங்கு, ஆகத்தா பல கொடுமைகளை அனுபவித்தாலும், தன் கன்னிமையை இழக்கவில்லை.
ஆகத்தா ஒரு கிறிஸ்தவப் பெண் என்பதை அறிந்த குவின்டினியன், அவரை நீதிபதிக்கு முன் கொணர்ந்தார். நீதிமன்றத்தில், ஆகத்தா தன் கடவுள் நம்பிக்கையை விட்டுவிட மறுத்ததால், கொடிய சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். உடலெங்கும் இரணமாகி, உணவும், மருந்தும் மறுக்கப்பட்டு, ஆகத்தா சிறையில் கிடந்தபோது, புனித பேதுரு, வானதூதர் ஒருவருடன் வந்து, ஆகத்தாவுக்குக் குணமளித்ததாகச் சொல்லப்படுகிறது.
கொடுமையானச் சித்திரவதைகளுக்குப் பின்னரும், ஆகத்தாவின் உறுதி குலையாமல் இருந்ததைக் கண்ட நீதிபதி, மிகக் கொடிய தண்டனை ஒன்றை அவருக்கு வழங்கினார். அதாவது, ஆகத்தா, ஊருக்கு நடுவே இழுத்துச் செல்லப்பட்டு, ஆடைகள் அனைத்தும் களையப்பட்டு, நெருப்புத் துண்டுகள் மீது உருட்டப்படவேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு.
உடல் வேதனைகளைப் பற்றி சிறிதும் அஞ்சாத இளம்பெண் ஆகத்தா, தன் மானத்தைக் காக்கும்படி இறைவனிடம் மன்றாடினார். அக்கொடிய தண்டனை நிறைவேற்றப்படவேண்டிய நாளன்று, ஒரு பெரும் நிலநடுக்கம் உருவானது. அந்நிலநடுக்கத்தில் ஆகத்தா இறைவனடி சேர்ந்தார். புனித ஆகத்தாவின் திருநாள், பிப்ரவரி 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.