2014-02-04 16:07:25

திருத்தந்தையின் கொரியத் திருப்பயணம் ஆசியாவுக்கு நம்பிக்கையின் செய்தியை வழங்கும், செயோல் பேராயர்


பிப்.04,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பது, ஆசியாவிலுள்ள எல்லா நாடுகளுக்கும் நம்பிக்கையின் செய்தியை வழங்குவதாக இருக்கும் என்று தென் கொரியாவின் செயோல் பேராயர் Andrew Yeom Soo-jung, பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, அண்மையில் திருப்பீடப் பேச்சாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி கூறியிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய செயோல் பேராயர் Yeom Soo-jung, இத்திருப்பயணம் கொரியத் திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு மாபெரும் உந்துதலாக அமையும் என்றும் கூறினார்.
தென் கொரியாவில் ஏழை-செல்வந்தர் இடைவெளியும், முற்போக்குச் சிந்தனையாளர்க்கும், பழமைவாதிகளுக்கும் இடையேயான வேறுபாடும் அதிகமாக உள்ளது என்றும், பலர் விசுவாச நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறிய பேராயர் Yeom Soo-jung, திருத்தந்தையின் கொரியத் திருப்பயணம் இப்பிரச்சனைகளைக் களைய உதவும் என்ற தனது நம்பிக்கையையும் வெளியிட்டார்.
தென் கொரியாவின் Daejeonல் வருகிற ஆகஸ்ட் 10 முதல் 17 வரை ஆசிய இளையோர் தினம் சிறப்பிக்கப்படவிருக்கும் நாள்களில் திருத்தந்தையின் கொரியத் திருப்பயணம் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.