2014-02-04 16:07:32

கிரேமிசன் பள்ளத்தாக்கில் சுவர் கட்டும் திட்டத்தை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு கானடா வேண்டுகோள்


பிப்.04,2014. புனிதபூமியின் கிரேமிசன் பள்ளத்தாக்கில் பாதுகாப்புச் சுவர் கட்டுவதற்கு இஸ்ரேல் அரசு எடுத்துவரும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு கானடா அரசு, இஸ்ரேல் அரசை வலியுறுத்துமாறு கேட்டுள்ளனர் கானடாவின் கத்தோலிக்க ஆயர்கள்.
பெத்லகேமுக்கு அருகிலுள்ள கிரேமிசன் பள்ளத்தாக்கைப் பிரிக்கும் சுவர் கட்டுவது குறித்த இஸ்ரேலின் திட்டம் பற்றி கானடாவின் வெளியுறவு அமைச்சர் John Baird க்குக் கடிதம் எழுதியுள்ள கானடா ஆயர் பேரவைத் தலைவர் Paul-André Durocher, இப்பரிவினைச் சுவர், 58 கிறிஸ்தவக் குடும்பங்கள் மற்றும் ஒரு கத்தோலிக்க துறவு இல்லத்தினரின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரிவினைச் சுவர், 400 ஏழை மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்குத் தடையாய் இருப்பதோடு, குடும்பங்களைத் தங்களின் விவசாய நிலங்களிலிருந்து பிரிக்கின்றது என்பதால், இந்தச் சுவர் கட்டுவதற்கு கானடா அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென்று ஆயரின் கடிதம் வலியுறுத்துகிறது.
இஸ்ரேல் தனது இந்நடவடிக்கையைக் கைவிடுவது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே அமைதி இடம்பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்று ஆயரின் கடிதம் மேலும் கூறியுள்ளது.

ஆதாரம் : CCCB







All the contents on this site are copyrighted ©.