2014-02-04 16:07:56

ஆஸ்திரேலியத் தடுப்புக்காவலில் குழந்தைகள்


பிப்.04,2014. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள குழந்தைகள் கட்டாயமாக தடுத்துவைக்கப்படுவது குறித்து விசாரணை நடத்துவதற்கு அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் சிறு பிள்ளைகள் என்ற போதிலும் அவர்களின் நடமாட்டச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், முக்கியமான வளர்ச்சிப் பருவத்தை, கம்பி வேலிகளுக்கு இடையில் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் இவர்களில் பலர் செலவழிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் Gillian Triggs .
தஞ்சம் கோரி வருபவர்களின் பிள்ளைகள் சிறிது காலம் தடுத்துவைக்கப்பட்டு அவர்களின் அடையாளம், உடல்நலம் போன்றவை உறுதிசெய்யப்படுவது தேவைதான் என்றாலும், 6 மாதங்கள், 15 மாதங்கள் என நீண்ட காலத்துக்குப் பிள்ளைகள் தடுத்து வைக்கப்படுவது பன்னாட்டுச் சட்டங்களை மீறுவதாக உள்ளது என பேராசிரியர் Triggs குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சம் கோரி வருவோரின் பிள்ளைகளை கட்டாயமாக தடுத்துவைப்பது என்பது ஆஸ்திரேலியாவுக்கு இருக்கின்ற மனித உரிமை கடப்பாடுகளுக்கு பொருந்தாத விடயமாக உள்ளது என்றும், பிள்ளைகளை நெடுங்காலம் தடுப்புக்காவல் முகாம்களில் வாழவைப்பது அவர்களுக்கு மோசமான உளநலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்றும் இவ்வாணையம் 2004ம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியிருந்தது.
ஆஸ்திரேலியாவின் குடியேற்றதாரர் தடுப்புக்காவல் மையங்களில் மொத்தத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதில் நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகள் ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் உள்ள நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.