2014-02-03 14:57:44

புனிதரும் மனிதரே : குருதி கொட்டியது, மண் சிவந்தது


1693ம் ஆண்டில், இராமநாதபுரம் பகுதியின் மறவ நாட்டு இளவரசர் தடியத்தேவரை, தீராத கொடிய நோய் ஒன்று வாட்டியது. அச்சமயத்தில் மறவ நாட்டில் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து வந்த ஜான் டி பிரிட்டோ என்ற போர்த்துக்கீசிய இயேசு சபை அருள்பணியாளர், மக்களை கொடிய நோய்கள் மற்றும் பிற துன்பங்களிலிருந்து காப்பாற்றி வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டார் தடியத்தேவர். இதனால் அவர் அருள்பணியாளரைத் தன்னிடம் வருமாறு வேண்டினார் தடியத்தேவர். புனிதரும் தனது வேதியருள் சிறந்த ஒருவரை அனுப்பி தடியத்தேவர் நலம்பெற உதவினார். நலமடைந்த தடியத்தேவர் கிறிஸ்தவராகவும் மாறினார். தனக்கிருந்த 5 மனைவியருள் முதல் மனைவியை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பிவிட்டார் தடியத்தேவர். திரும்பிச் சென்ற இப்பெண்களில் கடலாயி என்பவர் முகவை சேதுபதியின் நெருங்கிய உறவினர். இப்பெண் மன்னனிடம் முறையிட, ஓரியூரிலிருந்த உடையத்தேவர் மூலம் அருள்பணியாளர் டி பிரிட்டோவைக் கொல்ல தேதி குறிக்கப்பட்டது. பிப்ரவரி 4ம் தேதி ஓரியூர் திட்டையில் இவரின் தலை வெட்டப்பட்டது. அருள்பணியாளர் டி பிரிட்டோவின் முதல் சொட்டு இரத்தம் மண்ணைத் தொட்டவுடன் அப்பகுதியின் மண் முழுவதும் செந்நிறமானது. மறவ நாட்டு மக்களால் செல்லமாய் அருளானந்தர் என அழைக்கப்பட்ட புனிதரான அருள்பணியாளர் ஜான் டி பிரிட்டோ, ஒருமுறை கைகளில் விலங்கிடப்பட்டு இன்னும் மூன்று பேருடன் இரும்புச் சங்கிலிகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கயிறுகொண்டு குதிரையின் சேணத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டார். இப்புனிதர் பாழும் கிணற்றில் தலைகீழாகக் இறக்கப்பட்டார். கடும் வெயிலில் வெப்பம் மிகுந்த பாறையில் உருட்டப்பட்டார். ஒருமுறை சித்ரவதை செய்யப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் போர்த்துக்கல் திரும்பினார். அங்கு ஆயர் பதவியும், அரண்மனைப் பதவிகளும் தயாராக இருந்தன. ஆனால் தமிழகத்தில்தான் நற்செய்தி அறிவிப்பேன் என்ற உறுதியுடன் மீண்டும் வந்து பல கொடிய துன்பங்களை இயேசுவுக்காக அனுபவித்து மறைசாட்சியானார் புனித அருளானந்தர். காவி உடையணிந்து தமிழை நன்கு கற்று தமிழர்களில் ஒருவராக வாழ்ந்த புனித அருளானந்தரின் விழா பிப்ரவரி 4. இவர் "போர்த்துக்கலின் புனித பிரான்சிஸ் சேவியர்" எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.