2014-02-03 16:04:04

திருத்தந்தை பிரான்சிஸ்: உலகுக்கும் திருஅவைக்கும் துறவிகள் தேவைப்படுகின்றனர்


பிப்.03,2014. அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள், கடவுளின் அன்புக்கும் கருணைக்கும் வழங்கும் சாட்சிய வாழ்வு, உலகுக்கும் திருஅவைக்கும் தேவைப்படுகின்றது, வாழ்வின் பல்வேறு நிலைகளில் இது கடவுளின் அடையாளமாக உள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்துக்கொண்டு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் நின்றுகொண்டிருந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அருள்சகோதரிகள் இல்லாத உலகத்தையோ, திருஅவையையோ நினைத்துப் பார்க்க முடியாது என்றும் கூறினார்.
பிப்ரவரி 2, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினத்தையொட்டி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், நீதியும் அமைதியும் நிறைந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும், இளையோரோடும் ஏழைகளோடும் இறைவாக்கைப் பகிர்ந்து கொள்வதிலும் துறவிகள் புளிக்காரமாய் உள்ளனர் எனவும் கூறினார்.
கடவுளின் கொடை வழியாக, கன்னிமை, ஏழ்மை, பணிவு ஆகிய வார்த்தைப்பாடுகளின் மூலம், இயேசுவின் அடிச்சுவடுகளைத் தங்கள் வாழ்வு முழுவதையும் கொடையாகக் கொடுப்பதன் அடையாளமாக இந்நாளின் நற்செய்தி விளங்குகின்றது என்றும், கடவுளுக்குத் தன்னையே காணிக்கையாக்குவது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொருந்தும் என்றும் கூறினார் திருத்தந்தை
இயேசுவோடு, இயேசுவைப் போல, நாம் அனைவரும் நம் வாழ்வை, நம் குடும்பத்திலும், பணியிலும், திருஅவைக்கான சேவையிலும், கருணைப் பணிகளிலும் தாராளமாக வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம், இருந்தபோதிலும், இந்த அர்ப்பணம், வார்த்தைப்பாடுகளில் தங்களை முழுமையாக, கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணித்துள்ள துறவிகளால் சிறப்பாக வாழப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தகைய பல காரணங்களுக்காக, 2015ம் ஆண்டு துறவிகளுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதையும் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.