2014-02-03 16:02:58

திருத்தந்தை : கடவுளை அன்புகூரும் மனிதர், தன் மக்களையும் அன்புகூர்கிறார்


பிப்.03,2014. தாவீது தன் துன்பவேளைகளிலும் தன்னைக் காத்துகொள்ள கடவுள் பெயரையோ, தன் குடிமக்கள் நலனையோ சுயநல நோக்குடன் பயன்படுத்தவில்லை என்பதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், பாவியாயிருந்த தாவீது, கடவுள் பெயரை வைத்தோ, தன் குடிமக்கள் நலனைத் தியாகம் செய்தோ தன்னை நியாயப்படுத்திக்கொள்ள முன்வரவில்லை, எந்த அளவுக்கு பாவியோ அந்த அளவுக்கு அவர் புனிதரானார் என்றார்.
தாவீதிடமிருந்து நாம் மூன்று விடயங்களைக் கற்றுக்கொள்கிறோம்; கடவுளை அன்புகூரும் மனிதர் தன் மக்களையும் அன்புகூர்கிறார், தன்னைப் பாவி என்று ஏற்றுக்கொள்பவர் அதற்கு கழுவாய் தேடுகின்றார், தன் கடவுளை உறுதியாகத் தெரிந்தவர் அவரில் முழு நம்பிக்கை வைக்கிறார் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
தனக்குத் துரோகம் செய்த தன் மகன் அப்சலோமை எதிர்த்துப் போரிட்டால், எருசலேம் நகர் மக்கள் அழிவுக்குள்ளாவார்கள் என்பதை உணர்ந்தே தாவீது தப்பியோட முடிவெடுத்தார் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, சுயநலனுக்காக இறைவன் பெயரையும் குடிமக்கள் நலனையும் தியாகம் செய்யாதிருப்போம் என அழைப்புவிடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.