2014-02-01 14:50:35

தென் சூடானில் அரசின் ஊழல்கள் ஒழிக்கப்படுமாறு ஆயர்கள் வேண்டுகோள்


பிப்.01,2014. அண்மை வாரங்களாக தென் சூடானை அழிவுக்கு உள்ளாக்கியிருக்கும் மோதல்கள் நிரந்தரமாக முடிவுக்கு வருவதற்கு அரசின் ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் அமைதி நடவடிக்கையில் திருஅவையின் ஈடுபாடு அதிகரிக்கப்பட வேண்டுமென ஆயர்கள் கூறியுள்ளனர்.
சூடான் மற்றும் தென் சூடான் நாடுகளின் ஆயர்கள் இணைந்து ஜூபா நகரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் சூடானில் நிரந்தர அமைதி ஏற்படுவதற்கு, அரசுப் பதவிகளில் இரத்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், ஊழலும் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சகோதரர் சகோதரருக்கு எதிராகச் சண்டையிட்டு தேவையற்ற மரணங்களும் புலம்பெயர்வுகளும் ஏற்பட்டு பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளதையும், அதிர்ச்சியூட்டக்கூடிய அழிவுகளையும் காண முடிகின்றது என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், இந்த நிலைக்குப் பின்னர் தாங்கள் மௌனம் காக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
தென் சூடானின் தேசிய இராணுவம் ஒரே அரசியல் கட்சியோடு தொடர்பு கொண்டிருக்க முடியாது என்றும், தேசிய இராணுவத்துக்குப் புதிய பெயர் தேவை என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
சூடானில் 2005ம் ஆண்டின் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு ஆயர்கள் பெருமளவில் உதவியிருந்தாலும், கடந்த சனவரி 23ம் தேதி எத்தியோப்பியாவில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுப் பேச்சுவார்த்தைக்கு ஆயர்கள் அழைக்கப்படவில்லை.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.