2014-01-31 14:53:40

பிப்.01,2014. புனிதரும் மனிதரே. - ஏழைகளுக்கு நீதி


ஜெர்மனியைச் சேர்ந்த செல்வக் குடும்பத்தில் பிறந்த மார்க் ராய் என்பவர், பிரபுக்களுடன் வளர்ந்து, கல்வியறிவிலும் மேம்பட்டு புகழ்பெற்றவரானார். தன் 23ம் வயதிலேயே மெய்யியலிலும் எழுத்தியலிலும் முனைவர் பட்டம் பெற்றார். பல ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல மொழிகளைக் கற்றார். தன் 34ம் வயதில் நாட்டுச் சட்டத்திலும் திருஅவைச் சட்டத்திலும் முனைவர் பட்டத்தை முடித்து பேரறிஞர் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். இத்தகையப் பெரிய அறிவாளியும், செல்வந்தரும், பிரபல வழக்குரைஞருமான மார்க் ராய், செல்வந்தர்களால் பாதிப்புக்குள்ளான ஏழைகளுக்காக இலவசமாக வழக்காட முடிவெடுத்தார். அவரின் நண்பர்களுக்கு இது ஒரு தவறான முடிவாகத் தெரிந்தது. ஆனால் ராயோ, தன் முடிவில் உறுதியாயிருந்தார். 'ஏழைகளுக்கு நீதி' என்ற இவரின் போராட்டம் செல்வந்தர்களின் வெறுப்பையும், சக வழக்குரைஞர்களின் பகைமையையும் சம்பாதித்தது. இவர் ஏழைகளுக்காக இலவசமாக வழக்காடியதால், ஏனைய வழக்குரைஞர்களின் வருமானம் பாதிக்கப்பட்டு இவரை ஒதுக்கி வைத்தனர். நியாயத்திற்காகப் போராடுவதற்கும் தண்டனையா என மனமுடைந்த பேரறிஞர் ராய், தன் வேலையை உதறித்தள்ளினார். ஏழைகளுக்கு வேறுவழிகளில் பணியாற்ற ஆர்வம் கொண்டு கப்புச்சின் துறவுசபையில் இணைய விரும்பினார். இவரின் பெரிய படிப்பும், செல்வாக்குமிக்க குடும்பப் பின்னணியும் அதற்குத் தடையாக இருந்தாலும், போராடி வெற்றிக் கண்டார். 35ம் வயதில் கப்புச்சின் துறவுசபையில் இணைந்த இவர், ஃபிதெலிஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டு, பெரிய போதகரானார். இவர் போதனைகளைக் கேட்ட பல பிற கிறிஸ்தவ பிரிவுச்சபையினர் கத்தோலிக்கத் திருமறைக்குத் திரும்பினர். இதனால் கோபமுற்ற பிரிவினைச்சபையினர் இவரின் 45ம் வயதில் 1622ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, சீவிஸ் என்ற ஊரில் உள்ள புரோடோஸ்டாண்ட் ஆலய பீடத்தில் வைத்து, இவரைக் கொலை செய்தனர். புனித. சிக்மரிங்ஞன் ஃபிதெலிஸே கப்புச்சின் துறவுசபை தந்த முதல் மறைசாட்சியாவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.