2014-01-31 15:45:48

திருத்தந்தை பிரான்சிஸ் : கோட்பாடுகள், இறைமக்களுக்குப் பணி செய்வதாய் இருக்க வேண்டும்


சன.31,2014. விசுவாசத்தை அதன் தூய்மைப் பண்புடனும், முழுமைத்தன்மையுடனும் மக்களுக்கு வழங்கவேண்டியது விசுவாசக் கோட்பாட்டுப் பேராயப் பணியாளர்களின் பணியாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையில் தொடக்க காலத்திலிருந்தே விசுவாசக் கோட்பாடுகளை, கருத்தியல் கோட்பாடாக அல்லது மறைபொருளான கொள்கைகளாகக் கருதும் சோதனை இருந்துவந்துள்ளது, ஆனால், உண்மையில், இந்தக் கோட்பாடுகள் இறைமக்களுக்குப் பணி செய்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதோடு, நம் விசுவாசத்துக்கு உறுதியான அடித்தளம் அமைப்பதற்காகவும் இந்தக் கோட்பாடுகள் உள்ளன என்று கூறிய திருத்தந்தை, கடவுளிடமிருந்து வரும் மீட்பின் கொடைகளைக் கட்டுப்படுத்துவதற்கான பெரும் சோதனையும் இருக்கின்றது, உலகின் கண்ணோட்டங்கள் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் இது நல்ல நோக்கங்களோடும் செய்யப்படலாம் எனவும் கூறினார்.
எனினும், விசுவாசத்தை முழுமையாகப் பாதுகாக்கும் முக்கிய பணி இப்பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இப்பணியில் பிறர்மீது அன்பும் சகோதரத்துவ உணர்வும் கொண்டு, மதிப்புடன்கூடிய உரையாடலை எப்பொழுதும் கைக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.