2014-01-31 15:45:55

திருத்தந்தை பிரான்சிஸ் : ஒருவர் இறையாட்சி பற்றிய உணர்வை இழந்தால், பாவம் பற்றிய உணர்வையும் இழப்பார்


சன.31,2014. பாவம் பற்றிய உணர்வை மனிதர் இழந்திருப்பதே இக்காலத்தில் பெரிய பாவமாக இருக்கின்றது என்று இவ்வெள்ளி காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மன்னர் தாவீது, பத்சேபா என்ற பெண்ணின் அழகில் மயங்கி, அப்பெண்ணின் கணவர் உரியாவை போர்முனைக்கு அனுப்பி, போரில் அவர் இறந்ததை விவரிக்கும் இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், தாவீதின் தவற்றினால் அப்பாவி மனிதர் உரியா மரணத்துக்கு உள்ளானார், இதுவும் கொலையே என்று கூறினார்.
தாவீது மாபெரும் பாவத்தைச் செய்தார், ஆனால் அவர் அதைப் பாவமாக நோக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றுகூட நினைக்காமல், இந்த விவகாரத்தை எப்படித் தீர்க்கலாம் என்றுதான் தாவீது சிந்தித்தார் என்றும், இதேமாதிரியான செயல் நம் அனைவரின் வாழ்விலும் நேரிடலாம் என்றும் கூறினார்.
இவ்வாறு சோதிக்கப்படுவது வாழ்வின் போராட்டத்தில் ஓர் அங்கமாக உள்ளது என்றும், சாத்தான் அமைதியாகவே இருக்காது என்றும் எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ், ஒருவர், பாவம் பற்றிய உணர்வை இழப்பது, அவரில் இறையாட்சி மறக்கப்படுவது மற்றும் இறையாட்சி குறைந்துவருவதன் அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
பாவம் பற்றிய உணர்வை இழக்காதிருப்பதற்கு ஆண்டவர் வரம் தருகின்றார் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இக்கால உரியாக்களின் கல்லறைகளுக்கு ஆன்மீக மலர்களை நாம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.