2014-01-30 16:11:25

பாதுகாப்புக் கருவிகளை வாங்கிக் குவிப்பதால், நைஜீரிய அரசு தன் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாது - கர்தினால் John Onaiyekan


சன.30,2014. பல நூறு கோடி டாலர்கள் செலவு செய்து, பாதுகாப்புக் கருவிகளை வாங்கிக் குவிப்பதால், நைஜீரிய அரசு தன் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாது என்று அந்நாட்டு கர்தினால் John Olorunfemi Onaiyekan அவர்கள் கூறியுள்ளார்.
சனவரி 26, கடந்த ஞாயிறன்று, வடக்கு நைஜீரியாவின் Waga Chakawa என்ற ஊரில் கத்தோலிக்கக் கோவில் ஒன்று Boko Haram குழுவினரால் தாக்கப்பட்டதில், குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் Onaiyekan அவர்கள், Boko Haram மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் அல்லாவின் பெயரைக் கூறி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், அல்லா என்றோ, இயேசு கிறிஸ்து என்றோ இறைவனின் பெயர்களை உச்சரித்த வண்ணம் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை எப்போதும் நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.
அரசுக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே உருவாகியுள்ள ஓர் ஆபத்தான வளையத்தை யாராவது ஒருவர் உடைத்து, உரையாடலில் ஈடுபடவேண்டும் என்பதை வலியுறுத்திய கர்தினால் Onaiyekan அவர்கள், தான் இந்த அழைப்பை அரசுக்கு தற்போது விடுத்துள்ளதாகக் கூறினார்.
கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடித்தாலும், புதர்களில் வாழ்ந்த தங்கள் முன்னோரைப் போல, இன்னும் மிகவும் பின்தங்கிய நிலைகளில் வாழும் இளையோர், எதிர்காலம் ஏதுமின்றி, வன்முறைகளில் ஈடுபடுவதைத் தடுத்தால் மட்டுமே நாட்டில் பாதுகாப்பை உருவாக்க முடியுமே தவிர, ஆயுதங்களில் அரசு கவனம் செலுத்துவது நைஜீரியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று கர்தினால் Onaiyekan அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.