2014-01-30 16:08:15

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை இன்றி, ஒரு கிறிஸ்தவரைப் புரிந்துகொள்ள இயலாது


சன.30,2014. திருஅவை இன்றி, ஒரு கிறிஸ்தவரைப் புரிந்துகொள்ள இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
சனவரி 30, இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் தன் வழக்கமான காலைத் திருப்பலியாற்றியத் திருத்தந்தை அவர்கள், ஒரு மகனுக்குரிய உணர்வோடு, இறைவனிடம் தாவீது உரையாடியதை அடிப்படையாகக் கொண்டு தன் மறையுரையை வழங்கினார்.
திருஅவையுடன் இணைவதற்கு, தாழ்ச்சி, பற்றுறுதி, மற்றும் வேண்டுதல் என்ற மூன்று தூண்கள் தேவை என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவுடன் மட்டும் தொடர்பு கொண்டு, திருஅவையிலிருந்து விலகி இருப்பது ஒரு கற்பனை உலகில் வாழ்வதற்குச் சமம் என்பதை வலியுறுத்தினார்.
இறைவன் முன்னிலையில் தாவீது, தன்னையே தாழ்த்தி, உரையாடியதுபோல, ஒவ்வொரு கிறிஸ்தவரும் இறைவனுக்கு முன் தன்னையே தாழ்த்துவது, திருஅவையுடன் இணைவதற்கான முதல் படி என்று கூறினார் திருத்தந்தை.
திருஅவையுடன் இணைவதற்கு, பற்றுறுதியும், அதனுடன் தொடர்பு கொண்ட கீழ்படிதலும் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியை அடுத்தத் தலைமுறையினருக்கு சரியான வழியில் விட்டுச்செல்வதும் இந்தப் பற்றுறுதியின் ஓர் அங்கம் என்று தெளிவுபடுத்தினார்.
கோவிலில் திருப்பலியில் கலந்துகொள்ளும்போது திருஅவைக்காக வேண்டுதல் எழுப்புவதோடு நம் கடமை முடிவதில்லை, மாறாக, ஒவ்வொருநாளும் நம் இல்லங்களில் செபிக்கும்போதும் திருஅவையின் தேவைகளை இறைவனிடம் எடுத்துரைப்பது கிறிஸ்தவர்களின் கடமை என்றும் திருத்தந்தை தன் மரையுரையில் வலியுறுத்தினார்.
மேலும், புன்முறுவல் பூக்கத் தெரியாத கிறிஸ்தவர் இருக்கமுடியும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை; நமது நம்பிக்கைக்கு மகிழ்வுடன் சான்று பகர்வோம் என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.