2014-01-29 16:15:29

மனச் சுதந்திரத்துடன் மேற்கொள்ளப்படும் உரையாடல் மட்டுமே சிரியாவில் நிரந்த அமைதி தரும் - ஆர்த்தடாக்ஸ் சபைகளின் முதுபெரும் தந்தையர்


சன.29,2014. சகிப்புத் தன்மையற்ற மனநிலையைக் களைந்து, மனச் சுதந்திரத்துடன், உடன்பிறந்தோர் என்ற உணர்வுடன் மேற்கொள்ளப்படும் உரையாடல் வழியாக மட்டுமே சிரியாவில் நிரந்த அமைதி திரும்பும் என்று இரு பெரும் கிறிஸ்தவத் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
மாஸ்கோ இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, Kirill அவர்களும், அந்தியோக்கு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, பத்தாம் Yohanna அவர்களும், இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
சிரியாவில் அமைதியை உருவாக்கும் ஒரு முயற்சியாக, கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் இரண்டாம் ஜெனீவா பேச்சு வார்த்தைகள், அரசியல் அடிப்படைவாதங்களால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்று இரு தலைவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
சிரியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு ஆயர்களையும், டிசம்பரில் கடத்தப்பட்டுள்ள பெண் துறவிகளையும் விடுவிக்குமாறும் இந்த விண்ணப்பத்தில் முதுபெரும் தந்தையர் கேட்டுள்ளனர்.
சிரியாவில் உள்ள பழமை வாய்ந்த இடங்களைத் தாக்குவதை அனைவரும் உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும், இத்தகையத் தாக்குதல்களால், வருங்காலத்தினர் தங்கள் பாரம்பரியக் கருவூலங்களை இழக்கின்றனர் என்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளின் முதுபெரும் தந்தையர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.