2014-01-29 14:25:47

திருத்தந்தை பிரான்சிஸ் : உறுதிபூசுதல்,கிறிஸ்துவோடு நமக்குள்ள பிணைப்பை முழுமைப்படுத்துகிறது


சன.29,2014. இப்புதன் காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகள் மத்தியில் திறந்த காரில் வந்து அவர்களை வாழ்த்திய பின்னர் மேடைக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், அருளடையாளங்கள் பற்றிய தனது புதன் மறைக்கல்விப் போதகத்தைத் தொடர்ந்தார். அன்புச் சகோதர சகோதரிகளே, அருளடையாளங்கள் பற்றிய மூன்றாவது மறைக்கல்விப் போதகத்தில் உறுதிபூசுதல் பற்றி இன்று பார்ப்போம் என இப்புதன் பொது மறைபோதகத்தை ஆரம்பித்தார்.
RealAudioMP3 திருமுழுக்கு, திருநற்கருணை ஆகிய இரு அருளடையாளங்களுடன் உறுதிபூசுதல் அருளடையாளம், கிறிஸ்தவத் தொடக்கத்தின் அருளடையாளங்களுள் ஒன்றாக உள்ளது. இவ்வருளடையாளங்கள், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்ப்பில் பங்குதாரர்களாகவும், திருஅவையாம் அவரது உடலின் உயிருள்ள உறுப்பினர்களாகவும் ஆக்குகின்றன. உறுதிபூசுதலில், புனித எண்ணெய் தடவும் அருளடையாளத்தின் வழியாக, கடவுளின் அருள்பொழிவு செய்யப்பட்டவராகிய கிறிஸ்துவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்பொருட்டு தூய ஆவியின் கொடையைப் பெறுகிறோம். நமது திருமுழுக்கு அருளிலும், கிறிஸ்துவுக்கும் அவரின் அன்புக்கும் தினமும் சாட்சிபகரும் நமது பணியிலும் நாம் உறுதிப்படுத்தப்படுகிறோம், வலிமையடைகிறோம். நம் வாழ்வில் தூய ஆவி வேலை செய்வது, ஞானம், மெய்யுணர்வு, ஆலோசனை, மனஉறுதி, அறிவு, பக்தி, தெய்வபயம் ஆகிய ஆன்மீகக் கொடைகளில் பிரதிபலிக்கின்றது. நமது உறுதிபூசுதல் எனும் கொடைக்காக இன்று ஆண்டவருக்கு நன்றி சொல்வோம். மேலும், தூய ஆவியின் மகிழ்வால் நிரம்பப் பெற்று, நாம் பிறரோடு கொள்ளும் உறவிலும், தேவையில் இருப்போருக்கு நாம் திறந்த உள்ளத்தவராய் இருப்பதிலும், மகிழ்வு மற்றும் அமைதியின் நற்செய்திக்கு உயிருள்ள சான்றுகளாக வாழ்வதிலும் நாம் எப்பொழுதும் கிறிஸ்துவின் பிரசன்னத்தின் கண்ணாடிகளாக வாழ்வதற்கும் ஆண்டவரிடம் வரம் கேட்போம்.
இவ்வாறு, இப்புதன் பொது மறைபோதகத்தை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மறைபோதகத்தில் கலந்துகொண்ட அனைவர் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் இறைவனின் மகிழ்வும் அமைதியும் நிறைக்க வேண்டுமென வாழ்த்தி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.