2014-01-29 16:00:02

திருத்தந்தை பிரான்சிஸ் : அறிவு சார்ந்த பணி, திருஅவையின் பல்வேறு பணிகளுக்குத் தேவையான பணி


சன.29,2014. நம்பிக்கை என்பதை, அறிவுக்கண்கள் கொண்டு மட்டும் பார்ப்பது பொருத்தமல்ல, அதனை, மனக்கண்களாலும் காணவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் பெயரால் இயங்கும் அனைத்து கல்வி அமைப்புக்களும், சனவரி 28, இச்செவ்வாயன்று மாலை வத்திக்கானில் நடத்திய ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு செய்தி அனுப்பியத் திருத்தந்தை அவர்கள், இவ்வாறு கூறினார்.
சனவரி 28ம் தேதி கொண்டாடப்பட்ட, இறையியல் மேதையான அக்குவினோ நகர் புனித தோமா அவர்களின் திருநாளையொட்டி, இக்கூட்டம் நடைபெறுவது குறித்து தன் மகிழ்வை தெரிவித்தத் திருத்தந்தை அவர்கள், புனித தோமா போன்று, இதயத்தால் உணரப்படும் நம்பிக்கையே நம்மைச் சரியாக வழிநடத்தும் என்றும் கூறினார்.
உண்மை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என்று, நாம் வாழும் காலத்தில், உருவாகிவரும் குறுகிய நிலையைத் தவிர்த்து, முழுமையான உண்மையைப் பின்பற்ற நாம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டார்.
திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவரும், திருத்தந்தையின் பெயரால் இயங்கும் அனைத்து கல்வி அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளரும் ஆன கர்தினால் Gianfranco Ravasi அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியின் வழியாக, அறிவு சார்ந்த பணி, திருஅவையின் பல்வேறு பணிகளுக்குத் தேவையான பணி என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
இறையியல் மேதையான புனித தோமா அவர்களின் பெயரால், Alessandro Clemenzia, Maria Silvia Vaccarezza என்ற இரு பேராசிரியர்களுக்கு விருது வழங்குவதாகவும் திருத்தந்தை அவர்கள் தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.