2014-01-29 16:14:06

இஸ்ரேல் அரசு அமைக்கவிருக்கும் தடுப்புச்சுவர் முயற்சி நீதிக்குப் புறம்பானது - பன்னாட்டு ஆயர்கள் குழு


சன.29,2014. இயேசுவின் பிறப்பிடமான பெத்லகேமுக்கு அருகில் உள்ள Cremisan பள்ளத்தாக்கில் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டுமென்று பன்னாட்டு ஆயர்களின் குழுவொன்று விண்ணப்பித்துள்ளது.
Cremisan பள்ளத்தாக்கில் வாழும் 58 கிறிஸ்தவர்களின் இல்லங்களை இடித்துவிட்டு, அவ்வழியே இஸ்ரேல் அரசு அமைக்கவிருக்கும் தடுப்புச்சுவர் குறித்து, இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்தில் இப்புதனன்று வழக்கு ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் அரசின் இம்முயற்சி நீதிக்குப் புறம்பானது என்ற கருத்துடன், பன்னாட்டு ஆயர்கள் குழு, இச்செவ்வாயன்று இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இங்கிலாந்து, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, தென் ஆப்ரிக்கா, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த விண்ணப்பத்தில், இஸ்ரேல் அரசு தன் திட்டத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசின் இம்முயற்சியால், பெத்லகேம் பகுதி, எருசலேமிலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டு, மூச்சடைத்துப் போகும் என்றும், இத்தகைய அநீத முயற்சிகளால் அப்பகுதியில் அமைதி திரும்புவது அரிதாகிப் போகும் என்றும், ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் அரசு, தடுப்புச் சுவர் எழுப்புவது தன் பாதுகாப்பிற்கென சொன்னாலும், அந்த முயற்சியால் அப்பாவி மக்களின் வாழ்வு பெருமளவு பாதிக்கப்படுவது அநீதியானது என்றும், நீதி தேடும் அம்மக்களுடன் தாங்களும் செபத்தால் இணைந்திருப்பதாகவும் ஆயர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.