2014-01-29 16:21:25

107 ஆண்டுகளாக குற்றங்களே நடக்காத அதிசய கிராமம்


சன.29,2014. இந்தியாவின், சத்தீஸ்கர் மாநிலத்தில், 107 ஆண்டுகளாக, எவ்வித குற்றங்களும் நடக்காத, குற்ற வழக்குகள் பதிவாகாத அதிசய கிராமம் ஒன்று உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள, பூல்ஜர் கிராமத்திலுள்ள காவல் நிலையத்திற்கு, கடந்த 107 ஆண்டுகளாக, அக்கிராம மக்களிடமிருந்து, ஒரு புகார் கூட வந்தது இல்லையென்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பூல்ஜர் கிராமத்தில் அனைத்து தரப்பு மக்களும், தங்களுக்குள் பாகுபாடு இன்றி வாழ்வதால், ஜாதி, மதக் கலவரங்கள் ஏற்பட்டதில்லை; பெண்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர்; யாரும் பலாத்காரம் செய்யப்பட்டது கிடையாது; திருடர்களின் பயம் அறியாததால், திருட்டு என்பதையே இக்கிராம மக்களுக்கு தெரியாமல் உள்ளது என்று கூறப்படுகிறது.
தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள், கிராம அவைக்கு முன் வைக்கப்படுகிறது என்றும், அங்கு சமரசமான முடிவு எட்டப்படுவதால், எந்த தரப்பினரும் கிராம அவையின் முடிவை எதிர்த்து, இதுவரை காவல் நிலையம் சென்று புகார் அளித்தது கிடையாது என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கோர்பா மாவட்ட காவல் துறை அதிகாரி பேசுகையில், பூல்ஜர் கிராம மக்கள், இதுவரை எவ்வித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபட்டது கிடையாது; கோர்பா காவல் நிலையத்திற்கு உட்பட்ட, அனைத்து கிராமங்களிலும், குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன; ஆனால், பூல்ஜர் கிராமமக்கள், விதிவிலக்காக உள்ளனர். இவர்களின் செயல்பாடுகளுக்காக, சத்தீஸ்கர் மாநில அரசு இக்கிராமத்தை சிறந்த கிராமமாக அறிவித்து, விருது வழங்கியுள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.