2014-01-27 13:37:57

வாரம் ஓர் அலசல் – பாலஸ்தீனியரோடு ஒருமைப்பாடு


சன.27,2014. RealAudioMP3 இப்படியும் மனிதர்களா? என்று, மனிதர்களாக வாழும் அனைவரும் கேள்வி கேட்கும் அளவுக்கு, கடந்த வெள்ளியன்று, தென் இத்தாலியின் கலாபிரியா பகுதியில் ஒரு கொடூரச் செயல் நடந்துள்ளது. 'Coco' என்று செல்லமாக அழைக்கப்படும் Nicola Campolongo என்ற மூன்று வயதுச் சிறுவனின் எரிக்கப்பட்ட உடலை, எரிந்த வாகனம் ஒன்றிலிருந்து எடுத்துள்ளது காவல்துறை. Savatore Lannicelli என்ற 52 வயதான இந்தச் சிறுவனின் தாத்தாவும், தாத்தவின் 27 வயது நண்பியும் அச்சிறுவன் அருகில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். இந்தச் சிறுவனின் தாத்தா Lannicelli, இத்தாலியின் மாஃபியா குற்றக்கும்பலிடம் கடன்பட்டிருந்த தொகையை செலுத்தாததே இந்தக் கொலைகளுக்கான காரணம் என்று, கிடைத்துள்ள தடயங்களிலிருந்து காவல்துறை சந்தேகிக்கின்றது. இக்கொலைகளைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் மாஃபியா குற்றக்கும்பல், உலகில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகின்ற மற்றும் சக்திவாய்ந்த மாஃபியா குற்றக்கும்பல்களில் ஒன்றென ஊடகங்கள் கூறுகின்றன. இக்கொலைகள் நடந்துள்ள Ndrangheta என்ற ஊர், ஐரோப்பாவுக்கு இறக்குமதி செய்யப்படும் cocaine போதைப்பொருளில் 80 விழுக்காட்டு வியாபாரத்தை நடத்துகின்றது. இந்த வணிகத்தால் 4,000 கோடி யூரோ பணம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இக்கொலைக் குற்றத்தைச் செய்தவர்கள் மனம் வருந்தி மனம் மாற வேண்டுமெனச் செபிப்போம் என, தானும் செபித்து, வத்திக்கான் வளாகத்தில் நின்று கொண்டிருந்த 50 ஆயிரம் விசுவாசிகளையும் இஞ்ஞாயிறன்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
RealAudioMP3 அன்பு நெஞ்சங்களே, கடந்த டிசம்பரிலிருந்து கடும் அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் Ukraine நாட்டில், அனைவரும் வன்முறைகளை ஒதுக்கி உறுதியான உரையாடலில் ஈடுபடுமாறும் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். Ukraine அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் உடன்படிக்கையை தற்காலிகமாக நிறுத்தியதால், எதிர்க்கட்சியும் பொதுமக்களும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீதி அமைச்சரின் கட்டடம் உட்பட பல நகரங்களில் அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன. பல உயிர்ச் சேதங்களும், பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. மேலும், ஏறக்குறைய மூன்றாண்டுகளாக மோதல்கள் இடம்பெற்றுவரும் சிரியாவில் அமைதியைக் கொண்டுவருவதற்கு ஜெனீவாவில் 2ம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தாய்லாந்தில் வருகிற பிப்ரவரி 2ம் தேதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக, முன்கூட்டிய வாக்களிப்பில் வாக்காளர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கும் நோக்கில், தலைநகரிலும், ஏனைய நகரங்களிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கான வழியைத் தடுக்க முயன்றபோது வன்செயல்கள் வெடித்துள்ளன. இதில், அரசு எதிர்ப்புப் போராட்ட இயக்கத்தின் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஓரிரு நாள்களில் மட்டும் நாடுகளின் நிலைமையை அலசினால் இவைபோன்ற இன்னும் பல நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். அதேசமயம், கடந்த வியாழனன்று தென் சூடானுக்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது போன்ற பல நல்ல காரியங்களும் நடந்துள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் தொடர் மோதல்களால் உலகின் சில பகுதிகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணற்ற மக்கள் பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை, கடந்த 60 ஆண்டுகளுககு மேலாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுள் ஒன்றாகத்தான் உள்ளது. 1900மாம் ஆண்டு முதல் 1948ம் ஆண்டு வரையுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன உறவுகளைப் பார்க்கும்போது, 1900மாம் ஆண்டில் இஸ்ரேல் மக்கள் தங்கள் சமய, கலாச்சார அடையாளங்களுடன் பாலஸ்தீனியர்களுடன் அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் முதல் உலகப் போருக்குப் பின்னர் இங்கு நிலைமை மாறியது. இரஷ்யா, ஜெர்மன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இனப் பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட யூதர்கள் பலர், பாலஸ்தீனத்திற்கு வரத் தொடங்கினர். யூதர்கள் பெருமளவு நிதி திரட்டி பாலஸ்தீனியர்களிடம் இருந்து நிலங்களை வாங்க ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் யூத அரசு அமைக்க வேண்டும் என்று அரசியல் ஆதரவு திரட்டவும் ஆரம்பித்தனர். பாலஸ்தீனத்தில் யூதர்கள் அதிகமாகக் குடியேறுவது, தனிநாட்டுக்கான வரைபடங்கள், திட்டங்கள் வகுப்பது முதலியவற்றால் விழிப்படைந்தபாலஸ்தீனியர்கள் 1920ம் ஆண்டு பிப்ரவரியில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தனர். அதுமுதல், இனக்கலவரங்கள் நடப்பதும், இரு புறங்களிலும் வன்முறைகள், உயிரிழப்புகள் ஏற்படுவதுமாக இருந்தன. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் 1948ம் ஆண்டில் பாலஸ்தீனத்துக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிப்பு நடந்து, இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இப்போது யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி இஸ்ரேல் என்ற நாடாகவும், பாலஸ்தீன முஸ்லிம்கள் அதிகமாக வாழும், மேற்கு கரை(West bank) மற்றும் காசா பகுதி, பாலஸ்தீனம் என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்ரேல் கடந்த 1967ம் ஆண்டில் பாலஸ்தீனத்திடமிருந்து மேற்கு கரை பகுதியை கைப்பற்றியது. அங்கு குடியிருப்புகளைத் தொடர்வதும், எருசலேமின் கிழக்குப் பகுதியை சொந்தம் கொண்டாடுவதும் போன்றவற்றில் பாலஸ்தீனத்துடன் இஸ்ரேலுக்கு பிரச்சனை இருந்து வருகின்றது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஆயினும் இன்னும் முழுமையான வெற்றி கிட்டவில்லை. இதற்கிடையில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து கிழக்கு எருசலேம் உட்பட மேற்கு கரை பகுதிகளில் மீண்டும் 2,791 புதிய குடியேற்றங்களை உருவாக்கும் திட்டத்தில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகின்றது. இஸ்ரேல் கட்டியுள்ள 750 கிலோ மீட்டர் நீளமுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன தடுப்புச் சுவர், ஜெர்மனியின் பெர்லின் சுவரைவிட பல மடங்கு பெரியது.
மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் காலனியாதிக்க மனநிலையால் துன்புற்று வருகின்றனர். ஏனெனில் பாலஸ்தீனாவில், கி.பி 7ம் நூற்றாண்டிலிருந்தே முஸ்லிம்கள் வாழ்ந்தனர் எனச் சொல்லப்படுகின்றது. மேலும், பாலஸ்தீனியர்களும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்திடம் தனி நாடு என்ற அங்கீகாரத்தைத் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டு வருகின்றனர். 2012ம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. பொது அவையில், ஐ.நா.வின் உறுப்பு நாடாக, பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதில் நடந்த ஓட்டெடுப்பில் இந்தியா உட்பட 138 நாடுகள் ஆதரவளித்தன. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே நீண்ட காலமாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையை கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி துவக்கி வைத்தார். ஆயினும், பாதுகாப்பு, குடியேற்றத் தீர்வுகள் போன்ற பல பிரச்சனைகளால் சிறிய அளவிலான முன்னேற்றமே இதுவரை காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை இந்த 2014ம் ஆண்டை பாலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாடு ஆண்டு என அறிவித்து இம்மாதம் 16ம் தேதி அதனைத் துவக்கி வைத்துள்ளது. இவ்விழாவில் ஐ.நா.பொதுச் செயலரின் சார்பில் உரையாற்றிய, ஐ.நா. உதவிப் பொதுச் செயலர் Jan Eliasson, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதும், இரு நாடுகள் தீர்வு காண்பதும் இந்த ஆண்டின் நோக்கம் என்று கூறினார். 1967ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த எல்லைகளோடு, தங்களின் சொந்த நாட்டைக் கொண்டிருக்கும் உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளுடன் பாலஸ்தீனியர்கள் வாழ்வதற்கு இந்த ஆண்டில் முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் Eliasson கூறியுள்ளார். மேலும், இவ்வாண்டு மத்திய கிழக்கு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு முக்கிய ஆண்டாக இருக்கும் என்று ஐ.நா.பொதுச் செயலரும் ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனவே 2014ம் ஆண்டு புனித பூமியிலும், மத்திய கிழக்கிலும் அமைதியைக் கொண்டுவரும் ஆண்டாக அமையட்டும் என வாழ்த்துவோம். வருகிற மே 24 முதல் 26 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமிக்கு மேற்கொள்ளும் திருப்பயணம் இந்த அமைதிக்கு உதவும் எனவும் நம்புவோம்.
ஒரு முறை ஓர் அரசர் தனது பார்சி அடிமையோடு ஒரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அந்த அடிமை அந்நாள்வரை கடலில் பயணம் செய்ததே கிடையாது. அதனால் அந்த அடிமை அச்சத்தால் நடுநடுங்கிப் புலம்பத் தொடங்கினார். நேரம் ஆக ஆக அவரின் சப்தம் பலமாக இருந்தது. கப்பலில் பயணம் செய்தவர்கள் அந்த அடிமையை அமைதிப்படுத்த எவ்வளவோ முயன்றனர். ஆனால் அந்த அடிமையின் ஓலக்குரல் அதிமாகிக்கொண்டே இருந்தது. அரசரின் பயணம் கெட்டுவிடும் ஒரு சூழ்நிலை உருவாகியது. என்ன செய்வதென எவருக்கும் தெரியவில்லை. அப்போது அந்தக் கப்பலில் பயணம் செய்த ஞானி ஒருவர், ‘நீங்கள் விரும்பினால் நான் அவரை அமைதிப்படுத்துகிறேன்,’ என அரசரிடம் கூறினார். அதற்கு அரசர், ‘உண்மையாகவே இது ஒரு கருணைமிகு செயலாகும்,’ எனப் பதிலளித்தார். அந்த அடிமையைத் தூக்கி கடலில் வீசிடுமாறு பணித்தார் ஞானி. அந்த அடிமை திக்கு முக்காடி கடல் நீரை சிறிது குடித்தபின்பு அவரது தலைமுடியைப் பிடித்து கப்பலை நோக்கி இழுத்தனர். அவர் கப்பலை தன் இரு கைகளாலும் இறுகப்பற்றி, கப்பலுக்குள் வந்தவுடன் ஒரு மூலையில் அமைதியாகப் போய் உட்கார்ந்தார். அரசர் வியப்புற்று, ‘இதில் என்ன விவேகம் அடங்கியுள்ளது?’ என ஞானியிடம் வினவினார். அதற்கு அந்த ஞானி, ‘இந்த அடிமைக்கு நீரில் மூழ்கிப்போவது என்றால் என்னவென்று தெரியவில்லை, ஆகவே கப்பல்தரும் பாதுகாப்பை அவர் உணரவில்லை என்று சொன்னார்(நன்றி:சா’ஆடியின் ரோஜாவனத்திலிருந்து….).
அன்பு நெஞ்சங்களே, ஆபத்தை அனுபவிப்பவர், பாதுகாப்பின் மதிப்பறிகிறார். பாதுகாப்பை அனுபவிப்பவர் அமைதி அடைகிறார். அமைதியான மனம், மனிதர் அடையும் பெரும் பேறு(புனித அகஸ்டின்). வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; பாசத்தால்தான் வெல்ல முடியும்(மில்டன்). பாலஸ்தீனியருக்கு நீதியுடன்கூடிய அமைதி கிடைக்கட்டும்.







All the contents on this site are copyrighted ©.