2014-01-27 16:01:30

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணம் திருத்தந்தையின் பணி பற்றிய புரிதலை ஆழப்படுத்த உதவியுள்ளது


சன.27,2014. கிறிஸ்துவை நம்பும் அனைத்து விசுவாசிகளுடனும் உரையாடல் நடத்துவதற்குத் திறந்த உள்ளம் கொண்டிருப்பதைத் தவிர்த்து சிந்தித்தால், திருத்தந்தையின் பணியை இன்று முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
புனித பேதுருவின் வழிவந்தவரின் பணியை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணம் நமக்கு உதவியுள்ளது என்றும் நாம் சொல்லலாம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை நிறைவு செய்த மாலை திருவழிபாட்டை உரோம் புனித பவுல் பசிலிக்காவில் இச்சனிக்கிழமை மாலை நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்காலத்திலும் கிறிஸ்தவ ஒன்றிப்புப்பணியை நாம் தொடர்ந்து செய்வோம் என நம்புவோம் எனக் கூறினார்.
திருஅவையிலுள்ள பிரிவினைகள் இயல்பானவை, மற்றும் தவிர்க்க இயலாதவை என்று நாம் கருதமுடியாது என்றும், கிறிஸ்து பிளவுபடமுடியாது என்ற உறுதிப்பாட்டுடன், கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவர் மத்தியிலும் முழு ஒன்றிப்பு ஏற்படுவதற்கு நாம் தாழ்ச்சியுடன் உழைப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து பிளவுபட்டுள்ளாரா (1 கொரி. 1:13) என்ற தலைப்பில் 47வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் இம்மாதம் 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.