2014-01-27 16:00:22

திருத்தந்தை : ஆயர்கள் குருக்களின் திருநிலைப்பாடே திருஅவையை வேறுபடுத்திக் காட்டுகின்றது


சன.27,2014. திருஅவை என்பது ஒரு மனித நிறுவனமல்ல, இங்கு மக்களுக்குப் பணியாற்றும் ஆயர்களும் அருள்பணியாளர்களும் தூய ஆவியைப் பெறும்வண்ணம் திருநிலைப்படுத்தப்படுகிறார்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநிலைப்படுத்தப்பட்டவர்கள் திருஅவைக்குள் உள்ளதே, அதற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்றார்.
ஆயர்களும் அருள்பணியாளர்களும் ஒவ்வொரு நாளும் இந்த திருநிலைப்பாட்டிற்கு விசுவாசமாக இருந்து புனிதத்தில் வளரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தத் திருநிலைப்பாடு என்பது, ஆயர்களும், அருள்பணியாளர்களும் மக்களுக்கு பணிபுரிவதற்கான பலத்தையும் மகிழ்வையும் வழங்குகிறது என உரைத்த திருத்தந்தை, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம், அவரால் பராமரிக்கப்படுகின்றோம், அவரால் அன்புகூரப்படுகின்றோம் என்பதே திருநிலைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவல்லதாக உள்ளது என்றார்.
பங்குதளப் பணிகளில் தங்கள் வாழ்வையே தியாகம் செய்து வெளி உலகிற்கு தெரியாமலேயே மறைந்துள்ள அருள்பணியாளர்களையும் நாம் நினைவுகூர்வோம் எனவும் தன் மறையுரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருநிலைப்படுத்தப்பட்டோருள் சிலர் செய்துள்ள சில குற்றங்களைப் பெரிதுபடுத்த முனைவோர், அமைதியாகத் தியாகப்பணிகளை ஆற்றிவரும் பல ஆயிரக்கணக்கான அருள்பணியாளர்களின் பணிகள் குறித்து பேசுவதில்லை என்று கூறியத் திருத்தந்தை, ஒரு மரம் விழும்போது எழுப்பும் சப்தம், காட்டில் நன்முறையில் பல மரங்கள் வளர்வதால் உருவாகும் சப்தத்தைவிடப் பெரிது எனவும் எடுத்தியம்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.