2014-01-25 14:59:04

புனிதரும் மனிதரே - மலையைக் கடந்த மன உறுதி


பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த 15 வயது இளம்பெண் ஒருவர் கார்மேல் துறவு மடத்தில் சேரவிழைந்தார். துறவு வாழ்வுக்கு ஏற்ற வயது அதுவல்ல என்று அருள்பணியாளர்களும், ஆயரும் மறுப்பு தெரிவிக்கவே, அவர் திருத்தந்தையிடம் நேரில் விண்ணப்பிக்க, உரோம் நகர் சென்றார்.
1887ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி ஞாயிறன்று, திருத்தந்தையைச் சந்திக்கும் வாய்ப்பு, அந்த இளம் பெண்ணுக்குக் கிடைத்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 13ம் லியோ அவர்கள், அவ்வாண்டை, தன் குருத்துவப் பொன்விழா ஆண்டாகக் கொண்டாடிவந்தார்.
அவ்விளம்பெண், துறவு மடத்தில் சேரும் விண்ணப்பத்துடன் அங்கு வந்திருந்தார் என்பதை அறிந்த திருத்தந்தையின் உதவியாளர்கள், அவ்விண்ணப்பத்தைத் திருத்தந்தையிடம் கூறக்கூடாது; ஏனெனில், அது திருத்தந்தையின் பார்வையாளர் நேரத்தை அதிகரித்துவிடும் என்று எச்சரித்தனர். அந்த இளம் பெண்ணோ, திருத்தந்தையைக் கண்டதும், "திருத்தந்தையே, எனக்கு இப்போது வயது 15. நான் இந்த வயதில் துறவு வாழ்வில் சேர்வதற்குரிய உத்தரவை நீங்கள் மட்டுமே வழங்கமுடியும் என்பதை அறிந்தேன். இந்த உத்தரவை நீங்கள் வழங்கினால், அதையே உங்கள் குருத்துவப் பொன்விழாப் பரிசாக நான் பெற்றுச்செல்வேன்" என்று கண்ணீர் மல்கக் கூறினார். திருத்தந்தை அவரைப் பார்த்து, "இறைவனின் விருப்பம் அதுவானால், அவர் கட்டாயம் உன்னை அனுமதிப்பார்" என்று கூறினார்.
அந்த இளம்பெண் அடுத்த சிலமாதங்களில் கார்மேல் துறவு மடத்தில் சேர்ந்து, ஒன்பது ஆண்டுகள் எளிமையான, தவம் நிறைந்த வாழ்வை நிறைவுசெய்து, தன் 24வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவர்தான் குழந்தை இயேசுவின் புனித தெரேசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.