2014-01-25 15:55:56

தென் சூடானில் மீண்டும் வாழ்வது போன்ற உணர்வு,ஆயர் Taban


சன.25,2014. தென் சூடானில் அரசுக்கும் புரட்சிக் குழுவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளவேளை, அந்நாட்டில் தாங்கள் மீண்டும் வாழ்வதுபோன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது என, தென் சூடானின் Malakal மறைமாவட்ட நிர்வாகி ஆயர் Roko Taban தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒரு மாதமாக கடும் சண்டை இடம்பெற்றுவந்த தென் சூடானின் போர் நிறுத்த ஒப்பந்தம் இவ்வியாழனன்று எத்தியோப்பியாவில் கையெழுத்திடப்பட்டு இவ்வெள்ளி மாலை 5.30 மணிக்கு அமலுக்கு வந்தது. இச்சண்டையில் 5 இலட்சத்துக்கு மேற்பட்டோர் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் இராணுவத்துக்கும், புரட்சிப்படைக்கும் இடையே நடந்த கடும் சண்டையால் அதிகம் பாதிக்கப்பட்ட Malakal மறைமாவட்ட ஆயர் Taban, MISNA கத்தோலிக்க செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்த ஒப்பந்தத்தின் பலன் இன்னும் இரண்டு மூன்று நாள்களில் வெளிப்படும் எனத் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 15ம் தேதி இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்போடு தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவது மற்றுமொரு முக்கிய விடயமாக உளளது என்றுரைத்த ஆயர், தென் சூடானுக்கு அமைதி தேவை என்று கூறியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் 2011ம் ஆண்டில் தென் சூடான் சுதந்திரமடைந்தது.

ஆதாரம் : MISNA







All the contents on this site are copyrighted ©.