2014-01-25 15:55:49

உலகில் அதிகமான தொழுநோயாளர்களைக் கொண்டுள்ள நாடு இந்தியா


சன.25,2014. தொழுநோயாளரைக் கண்டுபிடித்து அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் அண்மைக் காலங்களில் முன்னேற்றம் காணப்பட்டாலும், உலகில் தொழுநோயாளர்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா இன்றும் முதலிடத்தில் உள்ளது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
சனவரி 26, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக தொழுநோயாளர் தினத்தைமுன்னிட்டு வெளியாகியுள்ள செய்தியில், உலகில் புதிதாக, தொழுநோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுபவரில் 71 விழுக்காட்டினர் தெற்கு ஆசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
உலகில் கடுமையாய்த் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 16 நாடுகளில் இந்தியா, இந்தோனேசியா, பங்களாதேஷ், நேபாளம், மியான்மார், இலங்கை, பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய எட்டு ஆசிய நாடுகள் உள்ளடங்கும்.
உலகில் 2012ம் ஆண்டில் இந்நோயால் புதிதாகத் தாக்கப்பட்ட 2,32,857 பேரில், 1,34,752 பேர் இந்தியாவில் உள்ளனர் என உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் சனவரி கடைசி ஞாயிறன்று உலக தொழுநோயாளர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.