2014-01-25 15:56:15

Ukraine கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், அரசுத்தலைவர் சந்திப்பு


சன.25,2014. Ukraine நாடு முழுவதும் அரசுக்கு எதிரான கடும் போராட்டங்கள் வலுத்துவரும்வேளை, அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அரசுத்தலைவர் Viktor Yanukovich அவர்களைச் சந்தித்து, நாட்டின் சமூக-அரசியல் பிரச்சனைகளைக் களைவதற்கு உரையாடலில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், நாட்டில் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்குச் செபிக்குமாறும் மக்களைக் கேட்டுள்ளனர் Ukraine கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.
இன்னும், கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் Ukraine நாட்டு ஆயர்கள் மற்றும் விசுவாசிகளுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர் கானடா ஆயர்கள்.
Ukraineல் அனைத்து உரிமைகளுக்கு, குறிப்பாக, மனித வாழ்வு, மனித மாண்பு, மனச்சான்றின் சுதந்திரம், மத சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், தன்னாட்சி அரசு ஆகியவற்றுக்கான உரிமைகளுக்கு உறுதி வழங்கப்பட வேண்டுமென கானடா ஆயர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கானடா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Paul-André Durocher, Ukraine கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk அவர்களுக்கு இவ்வெள்ளியன்று அனுப்பிய அறிக்கையில், கானடா ஆயர்களின் ஒருமைப்பாட்டுணர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கானடாவில் பல ஆண்டுகளாக, Ukraine நாட்டின் பல்லாயிரக்கணக்கான குடியேற்றதாரர் வாழ்வது பற்றி அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு, Ukraineல் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உரையாடலே அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் Durocher.
Ukraineல் அரசுக்கு எதிரான கடும் போராட்டங்கள் பல நாள்களாக நடைபெற்று வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.