2014-01-23 16:01:21

தென் கொரியாவில் ஆகஸ்ட் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மேய்ப்புப்பணி பயணம்


சன.23,2014. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியாவில், குறிப்பாக, தென் கொரியாவில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் திட்டம் குறித்து திருப்பீடம் ஆலோசித்து வருகிறது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் பயணங்கள் குறித்து, இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பீட பத்திரிக்கை அலுவலகத்தின் இயக்குனர் அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள், இவ்வாறு கூறினார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி முதல் 17ம் தேதி முடிய தென் கொரியாவின் Daejon நகரில் நடைபெறும் ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள திருத்தந்தை செல்லக்கூடும் என்று அருள் பணியாளர் Lombardi அவர்கள் அறிவித்தார்.
1999ம் ஆண்டு ஆசிய ஆயர்கள் பேரவையால் துவக்கப்பட்ட ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்கள், இதுவரை தாய்லாந்து, தாய்வான், இந்தியா, ஹாங்காங் மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன.
இவ்வாண்டு, தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் இந்த இளையோர் நாள் கொண்டாட்டங்களின்போது, தென் கொரியாவில் மறைசாட்சிகளாக உயிர் நீத்த 124 பேர் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படும் வாய்ப்பும் உள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.