2014-01-23 16:00:53

திருத்தந்தை பிரான்சிஸ் - விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து பொறாமையில் தங்களையே இழந்த பலரைக் காண்கிறோம்


சன.23,2014. நம் மத்தியில் உள்ள ஒற்றுமையைக் குலைத்து, நம்மை அழிவுக்கு இட்டுச் செல்வது, நம் மனதில் தோன்றும் பொறாமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் வழங்கிய மறையுரையில் எச்சரித்தார்.
கிறிஸ்தவ ஒற்றுமைக்காக செபிப்பதற்கென அர்ப்பணிக்கப்பட்ட காலத்தின் ஆறாம் நாளான இவ்வியாழனன்று காலை புனித மார்த்தா இல்லத்தில் ஆற்றியத் திருப்பலியில், தாவீதின் மீது பொறாமை கொண்ட மன்னன் சவுலை எடுத்துக்காட்டாகக் கூறி, தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.
விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து பொறாமையில் தங்களையே இழந்த பலரைக் காண்கிறோம் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, பொறாமையினால் தன் சகோதரனைக் கொன்ற காயின் நமக்குச் சிறந்த எச்சரிக்கையாக உள்ளார் என்றும் கூறினார்.
பொறாமையால் விளையும் இரு ஆபத்துக்களை திருத்தந்தை அவர்கள் தன் மறையுரையில் விளக்கினார். முதலாவதாக, பொறாமைப்படும் ஒருவர் மனதில் கசப்பு உணர்வுகள் நிறைவதால், அவர் மகிழ்வை இழந்து, தான் செல்லும் இடங்களிலெல்லாம் கசப்பை விதைக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இரண்டாவதாக, போறாமைப்படுபவரிடமிருந்து வதந்திகள் பரவுகின்றன என்றும், இதனால், சமுதாயம் பிளவுபடுகிறது என்றும் விளக்கினார் திருத்தந்தை.
ஒற்றுமையுடன், சிறப்பாகச் செயலாற்றிய பல குழுமங்கள் பொறாமையால் பிளவுபட்டு துன்புறுகின்றன என்றும், இக்குழுமங்களில் துவக்கத்தில் இருந்த மகிழ்வு விடைபெற்று, அங்கு சோகமே ஆட்சி செய்கிறது என்றும் தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.