2014-01-23 16:00:34

உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தி - கிறிஸ்தவர்களாகிய நாம் அச்சமின்றி 'டிஜிட்டல்' உலகின் குடிமக்களாக மாறுவோம்


சன.23,2014. நம் மத்தியில் பெருகியுள்ள தொடர்புகள் மற்றும் பயண வசதிகள் நம் உலகை மிகவும் சிறிதாக மாற்றி, நம்மை நெருங்கிவர வைத்துள்ளது என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு செய்தியை வழங்கியுள்ளார்.
ஜூன் மாதம் 1ம் தேதி, ஞாயிறன்று, திருஅவை சிறப்பிக்கவிருக்கும் 48வது உலகத் தொடர்பு நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள இச்செய்தியினை, திருப்பீட சமூகத் தொடர்புப்பணி அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli அவர்கள், இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.
கருவிகளின் உதவியாலும், உலகமயமாக்கல் என்ற போக்கினாலும் இவ்வுலகம் நெருங்கி வருவதுபோல் தோன்றினாலும், செல்வர், வறியோர் ஆகிய இரு பிரிவினருக்கிடையே இணைக்கமுடியாத, ஆழமான பிரிவு உருவாகியுள்ளது என்பதையும் நாம் மறுக்கமுடியாது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு குறுகியக் காலத்தில் தகவல்கள் உலகெங்கும் பரிமாறப்படும் இவ்வேளையில், நம்மிடையே உரையாடல்கள் குறைந்து வருவதும் வளர்ந்து வருகிறது என்ற எச்சரிக்கையைத் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய உலகில் ஒருவரை ஒருவர் சந்தித்து, உரையாடல்களை மேற்கொள்ளும் கட்டாயத்தில் நாம் வாழ்கிறோம் என்று சுட்டிக்காட்டும் திருத்தந்தையின் செய்தி, இந்தச் சந்திப்பிற்கு, தொடர்புகள் பெருமளவு உதவவேண்டும் என்றும் கூறுகிறது.
தனக்குள்ளேயே திருப்தியுடன் தங்கிவிடும் திருஅவைக்கும், காயப்பட்டு கிடக்கும் திருஅவைக்கும் இடையே உரையாடல் தேவை என்பதைச் சுட்டிக்காட்டும் திருத்தந்தை அவர்கள், இந்த உரையாடலை 'டிஜிட்டல்' உயர்வழிச் சாலைகள் மூலம் நாம் மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் அச்சமின்றி 'டிஜிட்டல்' உலகின் குடிமக்களாக மாறுவோம் என்ற அழைப்பை தன் செய்தியின் வழியாக விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்பு உலகம் நமக்கு முன் வைத்துள்ள அனைத்து சவால்களையும் திறமையுடன் ஏற்று, இறைவனின் அழகை அனைவரோடும் பகிர்ந்துகொள்வோம் என்ற கருத்துடன் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.