2014-01-22 15:52:56

புனிதரும் மனிதரே : சிறை தந்த உள்ளுணர்வு(St. Jerome Emiliani 1481 – 1537)


தனது உடல் வலிமை, ஆயுத பலம், படைவீரர்களின் திறமை ஆகியவையே தனது வாழ்வுக்குப் போதும் என்று நம்பி வாழ்ந்த திறமைமிக்க இராணுவ வீரர் ஜெரோம் எமிலியானி. இதனால் இவர், கடவுள் தனக்குத் தேவையில்லை என்ற உணர்வில் கடவுள் நம்பிக்கையின்றி வாழ்ந்து வந்தார். இராணுவத் தளபதியாக இருந்த இவரிடம் வெனிஸ் அரண்மனைக் கோட்டையைக் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவரின் இந்த அதிகாரமெல்லாம் வெனிஸ் எதிரிகள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றும்வரைதான். காம்பிராய் கூட்டமைப்பு என்ற வெனிஸ் எதிரிகள் படை, 1508ம் ஆண்டில் இந்தக் கோட்டையைக் கைப்பற்றியது. அப்போது நடந்த சண்டையில் ஜெரோம் எமிலியானி கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு இருட்டான அழுக்கு நிறைந்த சிறைக்கிடங்கில் சங்கிலிகளால் கட்டப்பட்டு அடைக்கப்பட்டார். இது இவரது இரண்டாவது சிறைவாழ்வு. இம்முறை எமிலியானி கைவிலங்குகளைத் தகர்த்தெறியத் தீர்மானித்தார். ஆனால் அவரது இந்த 2வது சிறைவாழ்வு அகக்கண்களை மெதுவாகத் திறந்தது. சிறையில் நிறைய சிந்தித்தார் எமிலியானி. அற்புதமாக சிறையிலிருந்து வெளிவந்த ஜெரோம் எமிலியானி, அதற்கு நன்றியாக, அந்த இடத்துக்கு அருகிலிருந்த த்ரேவிசோ ஆலயத்தில் அவரைக் கட்டியிருந்த இரும்பு கைவிலங்குகளை மாட்டி வைத்தார். இவர் உடலளவில் மட்டுமல்ல, ஆன்மீகச் சிறையிலிருந்தும் விடுதலையடைந்தார். வெனிசுக்குத் திரும்பி குருத்துவத்துக்குப் படித்தார். வெனிஸ் பகுதியில் போர் முடிந்திருந்தாலும், அதன் பாதிப்பால் மக்கள் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மிகவும் துன்புற்றனர். இம்முறை இவர் இராணுவத்துக்கு அல்ல, ஏழைகளுக்கும் துன்புறுவோருக்கும் உதவிகள் செய்தார். தனது சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி கைவிடப்பட்ட சிறாருக்கென ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பராமரித்து வந்தார். எமிலியானி நோயாளிகளைப் பராமரித்துக்கொண்டிருந்தபோது இவரும் நோயால் தாக்கப்பட்டார். அப்போது, இவர் ஆலயத்தில் மாட்டி வைத்திருந்த கைவிலங்கின் கடைசிப் பகுதி கீழே விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. 1537ம் ஆண்டு தனது 56வது வயதில் இறந்த புனித ஜெரோம் எமிலியானி கைவிடப்பட்ட சிறாருக்குப் பாதுகாவலர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.