2014-01-22 16:17:57

துன்பங்களை அனுபவிக்கும் குடும்பங்களுக்கு திருஅவையின் கனிவான முகத்தைக் காட்டுவது நம் கடமை - கர்தினால் Veglio


சன.22,2014. கடல்கொள்ளைக் காரர்களால் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பயணிகளையும், அவர்கள் குடும்பங்களையும் சிறப்பாக எண்ணிப்பார்க்கிறோம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடல்பயணிகள் மேய்ப்புப்பணி குறித்த ஆண்டு கூட்டம் சனவரி 20 இத்திங்கள் முதல் 24, இவ்வெள்ளி முடிய உரோம் நகரில் நடைபெறுவதையொட்டி, குடியேற்றதாரர் மற்றும் பயணிகள் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio அவர்கள், அக்கூட்டத்தின் துவக்க அமர்வில், இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
கடல் பயணங்களின்போது கடத்தப்பட்டு துன்பங்களை அனுபவித்துவரும் நபர்களின் குடும்பங்களுக்கு திருஅவையின் கனிவான முகத்தைக் காட்டுவது, கடல்பயணிகள் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோரின் கடமை என்று கர்தினால் Veglio அவர்கள் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பன்னாட்டு உறுப்பினர்கள், சனவரி 22, இப்புதனன்று திருத்தந்தை தலைமையேற்று நடத்திய புதன் பொது மறையுரையிலும் பங்கேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.