2014-01-22 16:00:02

திருத்தந்தை பிரான்சிஸ்: சிரியா ஒப்புரவின் பாதையைத் தேர்ந்துகொள்ளட்டும்


சன.22,2014. ஆண்டுதோறும் சனவரி 18 முதல், சனவரி 25 வரை அனைத்துலக அளவில் கிறிஸ்தவ சபைகள், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைக் கடைப்பிடிக்கின்றன. எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!(யோவா.17,21) என்று செபித்த கிறிஸ்துவின் விருப்பத்துக்கிணங்க, திருமுழுக்கு பெற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்பதற்காக இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் சிறப்பான செபங்கள் சொல்லப்படுகின்றன. 1908ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் காலை அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் பற்றிய சிந்தனைகளையே வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். திறந்த காரில் திருப்பயணிகள் மத்தியில் வலம் வந்து குழந்தைகளை முத்தமிட்டு அனைவரையும் வாழ்த்திய பின்னர் மேடையில் அமர்ந்த திருத்தந்தை, அன்புச் சகோதர சகோதரிகளே, கடந்த சனிக்கிழமையன்று நாம் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைத் தொடங்கினோம், இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், புனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25, வருகிற சனிக்கிழமையோடு நிறைவடையும் என பொது மறைபோதகத்தைத் தொடங்கினார்.
RealAudioMP3 “கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா?”(1கொரி.1,13) என்ற இவ்வாண்டு இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்துக்கான மையப்பொருள், புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து பிளவுபடவில்லை என்பது நமக்குத் தெரியும். ஆயினும், நம் சமூகங்கள் தொடர்ந்து பிளவுகளை அனுபவித்து வருகின்றன என்பதை நாம் நேர்மையுடன் ஏற்க வேண்டும். இந்தப் பிளவுகள், துர்மாதிரிகைக்கு ஊற்றாகவும், நற்செய்திக்கு நாம் கூறும் சான்றைப் பலவீனப்படுத்துவதாகவும் உள்ளன. தங்களுக்குள்ளே பிளவுப்பட்டிருந்த கொரிந்தியரை பவுல் இடித்துரைத்தபோது, அம்மக்கள் தாங்கள் பெற்றுள்ள மாபெரும் ஆன்மீகக் கொடைகளில் அகமகிழ வேண்டுமென்று அவர் நினைவுபடுத்தினார். பிற கிறிஸ்தவர்களுக்கு கடவுள் வழங்கியுள்ள கொடைகளில் நாம் அகமகிழ வேண்டுமென்று புனித பவுலின் இவ்வார்த்தைகள் நம்மை ஊக்கப்படுத்துகின்றன. நாம் அவர்களிடமிருந்து பெறக்கூடிய இக்கொடைகள் நமது வளமைக்கானவை. இதற்கு, தாழ்ச்சியும், பகுத்தறிதலும், நிலையான மனமாற்றமும் நமக்குத் தேவை. இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரத்தில் புனித பவுலின் போதனைகளைத் தியானிக்கும் நாம், தூயவாழ்வுக்கும் ஆண்டவரின் விருப்பத்துக்கு விசுவாசமாகவும் இருப்பதற்கான நமது முயற்சியை கிறிஸ்துவைப் பின்செல்லும் அனைவரோடும் சேர்ந்து நாம் உறுதிப்படுத்தப்படுவோமா
இவ்வாறு, இப்புதன் பொது மறைபோதகத்தை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியாவில் அமைதி இடம்பெறுவதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் தொடங்கியுள்ள வத்திக்கான் உட்பட உலக நாடுகளின் கூட்டம் பற்றிக் குறிப்பிட்டு, சிரியாவில் போர்நிறுத்தம் இடம்பெறுவதற்கும், அந்நாடு ஒப்புரவு மற்றும் மறுசீரமைப்பை நோக்கி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவும் அனைத்து வகையிலும் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டார் RealAudioMP3 . துன்புறும் சிரியா மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டு அந்நாட்டில் உடனடியாக வன்முறை நிறுத்தப்படுவதற்கு, இக்கூட்டத்தில் கலந்துகொள்வோர் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு ஆண்டவர் ஒவ்வொருவரின் இதயத்தையும் தொட வேண்டுமெனத் தான் செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் இப்புதன் பொது மறைபோதகத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.