2014-01-22 16:18:38

சிரியாவை இரத்தத்தில் மூழ்கச் செய்துள்ள போருக்கு நிரந்தர முடிவு கிடைக்கும் - மாஸ்கோ முதுபெரும் தந்தை Kirill நம்பிக்கை


சன.22,2014. "இரண்டாம் ஜெனீவா" என்ற பெயரில் துவங்கியுள்ள கருத்தரங்கு, சிரியா நாட்டை இரத்தத்தில் மூழ்கச் செய்துள்ள போருக்கு ஒரு நிரந்தர முடிவைக் கொணரும் என்று தான் நம்புவதாக, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் தலைவர் Kirill அவர்கள் கூறினார்.
ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு முயற்சியாக, சுவிட்சர்லாந்தின் Montreux என்ற நகரில், இப்புதனன்று துவங்கியுள்ள இக்கூட்டத்தில் நிகழ்வனவற்றை, உலகில் அமைதியை விரும்பும் அனைத்து உள்ளங்களும் ஆவலோடு பின்பற்றுகின்றனர் என்று மாஸ்கோ முதுபெரும் தந்தை Kirill அவர்கள் எடுத்துரைத்தார்.
மேலும், சிரியாவில் நிகழும் போரின் ஒரு பக்க விளைவாக, அந்நாட்டில் கடத்தி வைக்கப்பட்டுள்ள ஆர்த்தடாக்ஸ் சபை ஆயர்கள் இருவரை விடுவிக்கக் கோரியும் மாஸ்கோ முதுபெரும் தந்தை Kirill அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
சிரியாவில், மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த Boulos Yazigi, மற்றும் Mar Gregorios Youhanna Ibrahim ஆகிய இரு ஆயர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கடத்தப்பட்டனர். இவர்களைக் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரைக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.