2014-01-22 16:19:13

அமெரிக்க அரசுத்தலைவர், பாரக் ஒபாமா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க மார்ச் மாதம் வத்திக்கானுக்கு வருகை


சன.22,2014. வருகிற மார்ச் 27ம் தேதி, வியாழனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர், பாரக் ஒபாமா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க வத்திக்கானுக்கு வருகை தருகிறார் என்று அமெரிக்க அரசும், திருப்பீடமும் அறிவித்துள்ளன.
சனவரி 21, இச்செவ்வாயன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான இச்செய்தியை, திருப்பீடப் பத்திரிக்கை அலுவலகத்தின் தலைவர், இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் உறுதி செய்தார்.
கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பணியேற்ற திருப்பலியில், அமெரிக்க அரசின் சார்பில், அந்நாட்டுத் துணைத் தலைவர் Joe Biden அவர்கள் பங்கேற்றதும், இவ்வாண்டு சனவரி 14ம் தேதி, அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் John Kerry அவர்கள், திருப்பீடச் செயலரும் அண்மையில் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ளவருமான பேராயர் Pietro Parolin அவர்களைச் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கன.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே அணு ஆயுதங்கள் குறித்து, நெதர்லாந்தில் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில், நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள் திருத்தந்தையைச் சந்திக்க வத்திக்கான் வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தபின், இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitano அவர்களையும், பிரதமர் Enrico Letta அவர்களையும் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, 2009ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வத்திக்கானில் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.