2014-01-21 16:02:41

விவிலியத்
தேடல் காணாமற்போனவை பற்றிய உவமைகள் பகுதி - 10


RealAudioMP3 சனவரி, 18, கடந்த சனிக்கிழமை, 'தி இந்து' என்ற நாளிதழின் தமிழ் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தி இவ்விதம் துவங்கியிருந்தது:
மெரினாவில் காணும் பொங்கல் கொண்டாட வந்த கூட்டத்தில் காணாமல்போன 7 வயது சிறுமியை அவரது வீட்டுக்கே அழைத்து வந்து ஒப்படைத்தார் ஒரு முஸ்லிம் இளைஞர்.
"காணும் பொங்கல் கொண்டாட வந்த கூட்டத்தில் காணாமல் போன சிறுமி" என்ற வார்த்தைத் தொகுப்பு என் கவனத்தை முதலில் ஈர்த்தது. ஒவ்வோர் ஆண்டும் காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளைப் பற்றியச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவ்வாண்டும் இதற்கு விதிவிலக்கல்ல... இச்செய்தியில் சொல்லப்பட்டுள்ள ஒரு சில தகவல்கள் சில பாடங்களை நமக்குப் புகட்டுகின்றன.


காணாமற்போனவை பற்றிய உவமைகளைச் சிந்தித்துவரும் நமக்கு, இச்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வு, இன்றைய நிலையைப் படம்பிடித்துக் காட்டும் மற்றோர் உவமையாக இருப்பதைப்போல் உணர்கிறேன்.

கொண்டாட்டம் என்ற பெயரில் நாம் கூடிவரும்போது, அங்கு குழந்தைகள் காணாமற்போவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று, நாம் பயன்படுத்தும் கருவிகள். தொடர்புகளுக்கென்று நாம் பயன்படுத்தும் கருவிகள், நம் தொடர்புகளைத் தொலைத்துவிடும் ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளன. இந்நிகழ்வில், தாயின் கவனம் 'செல்போன்' மீது திரும்பியதால், மகளைத் தொலைத்துவிட்டார்.
வெளியிடங்களில், கூட்டங்களில், கருவிகள்மீது நம் கவனம் திரும்பும்போது, குழந்தைகளைத் தொலைத்துவிடும் ஆபத்து உள்ளது. இதே ஆபத்து வீட்டுக்குள்ளும் நிலவுவதைக் காண்கிறோம். எத்தனையோ இல்லங்களில் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் நாடகத்தொடர்களும் ('சீரியல்'), விளையாட்டுப்போட்டிகளும் பெற்றோரின் கவனத்தைக் கட்டிப்போடுவதால், வீட்டிலுள்ள குழந்தைகள் பல வழிகளில் காணாமல் போகும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
உடலளவில் காணாமல் போவது மட்டும் அல்ல; மனதளவிலும், வயதுக்கு மீறிய பல வழிகளில், குழந்தைகள் காணாமல் போகின்றனர். பெற்றோரின் கவனம் குழந்தைகள் மீது இல்லாததால், எத்தனைக் குழந்தைகள், ஆபத்தான இணையத்தளங்களிலும், வீடியோ விளையாட்டுக்களிலும் தங்களைத் தொலைத்துவருகின்றனர்! இந்தக் கசப்பான உண்மையை நாம் எதிர்கொள்வதற்கு இச்செய்தி நமக்கு ஓரு தூண்டுதலாக உள்ளது.

கூட்டங்களில் காணாமல் போவது குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும்தான் என்பது நாம் எதிர்கொள்ளவேண்டிய மற்றொரு கசப்பான உண்மை. குழந்தைகள் காணாமல் போவதற்கு, சந்தர்ப்பச் சூழல்களைக் காரணங்களாகச் சொல்லலாம். இத்தகையச் சூழல்களில் பெரியவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு குழந்தைகள் பலியாகின்றனர். ஆனால், வயதில் முதிர்ந்தவர்கள், கூட்டங்களைத் தேடிச்சென்று காணாமல்போகின்றனர். வாழ்வில் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, அவற்றிலிருந்து தப்பிக்க, கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்துவிடுவதை ஒரு வடிகாலாகப் பயன்படுத்துகின்றனர். பெருநகரங்களில், மிக சப்தமான 'டிஸ்கோ' இசையுடன், மதுபானங்களுடன் நடைபெறும் பல கூட்டங்களில் கலந்துகொள்ளும் இளையோரின் கண்களில் எதையோ தொலைத்துவிட்டுத் தேடும் ஏக்கத்தைக் காணலாம்.
அரசியல் தலைவர்களைச் சுற்றி, சினிமா நாயகர்களைச் சுற்றி, சாதித் தலைவர்களை, விளையாட்டு வீரர்களைச் சுற்றி திரளும் கூட்டங்களிலும் இளையோர் பெருமளவில் காணாமற்போவதை இந்தியாவில் குறிப்பாகக் காணலாம். இந்தியாவில் நிகழவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை இந்நேரத்தில் எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அனல் பறக்கும் தேர்தல் கூட்டங்கள் நடைபெற்றுவரும் இவ்வேளையில், தங்கள் சுயமான சிந்தனைகளைத் தொலைத்துவிட்டு, இந்தியாவைக் கூறுபோடும் பிரிவினைப் பாடங்களிலும், வன்முறைப் பாடங்களிலும் காணாமல்போகும் பல்லாயிரம் மக்களை இந்நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. காணும் பொங்கல் கூட்டத்தில் ஒரு சிறுமி காணாமல் போய்விட்டார் என்ற செய்தி நம் உள்ளத்தில் இத்தகையச் சிந்தனைத் தொடரை உருவாக்குகிறது.

கடந்த சில வாரங்களாக நாம் சிந்தித்துவரும் காணாமற்போனவை பற்றிய உவமைகளில், இடையர், பெண், தந்தை ஆகிய மூவரும் தாங்கள் ஒன்றை இழந்தபோது என்ன செய்தனர் என்பதைச் சிந்தித்தால், அதில் நமக்கும் பாடங்கள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஆட்டை இழந்த இடையரும், காசை இழந்த பெண்ணும் தாங்கள் இழந்ததைத் தேடிச் சென்றனர். மகனை இழந்த தந்தையோ, பொறுமையாகக் காத்திருந்தார். காணாமல்போன ஆடும், காசும் தானாகவே திரும்பிவர வாய்ப்புக்கள் இல்லை. எனவே, அவற்றை மீண்டும் பெறுவதற்கு மனித முயற்சிகள் தேவைப்பட்டன. ஆனால், காணாமல்போன மகன் திரும்பிவரும் வாய்ப்புக்கள் இருந்ததால், நம்பிக்கையோடு கூடிய பொறுமையும், திரும்பிவரும் மகனை வரவேற்கும் திறந்த உள்ளமும் அந்தத் தந்தையிடம் தேவைப்பட்டன. அவரது பொறுமையும் நம்பிக்கையும் வீண்போகாதவண்ணம் இளைய மகன் திரும்பிவந்தார். அந்த இல்லத்தில் மகிழ்வு நிறைந்த விருந்து நடந்தது. அதேபோல், இடையரும், பெண்ணும், ஆட்டையும், காசையும் கண்டேடுத்ததை, நண்பர்கள் அனைவரிடமும் பறைசாற்றி, அவர்களைத் தங்கள் மகிழ்வில் பங்குகொள்ள அழைத்தனர்.
இடையர், பெண், ஆகியோர் அடைந்த மகிழ்வைப் போல, விண்ணுலகிலும் மகிழ்ச்சி உண்டாகும் என்று இயேசு கூறும் வார்த்தைகள் நமது தேடலின் உச்சம் என்று சொல்லலாம். முதல் இரு உவமைகளின் இறுதியில் இயேசு கூறும் வார்த்தைகள் இவைதாம்:
லூக்கா 15: 7,10மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்... மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.
'மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து, விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்' என்றும், 'கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்' என்றும் இயேசு கூறுவது நமக்கும் மகிழ்வைத் தருகிறது. கூடவே ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. விண்ணுலகில், கடவுளின் தூதரிடையில் என்று குறிப்பிடும் இயேசு ஏன் கடவுளிடம் மகிழ்வு உண்டாகும் என்று குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு ஒரு சில வரிகளில் பதில் சொல்லாமல், உலகப் புகழ்பெற்ற உவமையின் வழியாக இயேசு பதில் சொல்லியுள்ளார். மனம் திருந்தும் ஒரு பாவியைக்குறித்து இறைவன் அடையக்கூடிய மகிழ்வை காணாமற்போன மகன் உவமையில் விரிவாகக் கூறுகிறார். இந்த உவமையின் இறுதியில் அந்த தந்தை அடைந்த மகிழ்வைக் குறிப்பிடும் இயேசு 'அதேபோல் கடவுள் மகிழ்வார்...' என்ற ஒப்புமைகள் ஏதுமின்றி தன் கதையை முடிக்கிறார்.
தான் உழைத்து சேர்த்த சொத்தின் ஒரு பகுதியை முற்றிலும் அழித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவரும் மகனிடம் ஒரு கேள்வியும் எழுப்பாமல், அவன் திரும்பி வந்தது போதும் என்று விழா கொண்டாடும் தந்தையின் உருவம் நம் மனதில் பதிந்தால் போதும்... அந்தத் தந்தையின் வடிவத்தில் இறைவனின் பாசத்தை நாம் ஓரளவு புரிந்துகொள்வோம் என்ற நம்பிக்கையில் இயேசு தன் கதையை முடித்துள்ளார். இதுதான் இந்த உவமையின் அழகை இன்னும் கூட்டியுள்ளது.

காணும் பொங்கல் கூட்டத்தில் காணாமல்போன சிறுமியைக் குறித்த அச்செய்தியின் இறுதிப் பகுதி மனதுக்கு மகிழ்வையும், நம்பிக்கையையும் தருகின்றது. அழுதுகொண்டிருந்த சிறுமியைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றவர் ஒரு முஸ்லிம். அவர் அடுத்தநாள் அச்சிறுமி கூறிய விவரங்களின் உதவியுடன், அவரை அவரது தாயிடம் கொண்டுபோய் சேர்த்தார். சிறுமியைக் கண்ட தாயும், அங்கு கூடியிருந்தோரும் அவரைக் கட்டியணைத்து அழத் துவங்கினர். தன் கடமை முடிந்ததென்று அறிந்த இளைஞர், அங்கிருந்து அமைதியாகச் சென்றுவிட்டார்.

'தி இந்து' இணையதளத்தில் இச்செய்தியின் இறுதியில் வாசகர் கருத்துக்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் பலர் இந்த நல்ல உள்ளத்தைப் புகழ்ந்துள்ளனர். வாசகர்களில் ஒருவர், இந்த இளைஞரின் மதத்தை இச்செய்தியில் குறிப்பிட்டது சரியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
நல்லவை நடக்கும்போது எந்த மதத்தவர் என்பது குறிப்பிடப்படக் கூடாது என்றால், தீவிரவாதத் தாக்குதல் போன்ற தவறுகள் நடைபெறும்போதும் எந்த மதத்தவர் என்பது குறிப்பிடப்படக் கூடாது என்று ஒரு சிலர் பதிலும் சொல்லியிருக்கின்றனர்.

இந்த விவாதம் நமக்குத் தேவையில்லை... காணாமல்போனச் சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தவர் எம்மதம் என்பது முக்கியமல்ல. அவர் மனித குடும்பத்தின் தலைசிறந்த மனிதர் என்பது மட்டுமே முக்கியம்.
காணாமல் போவது இன்றைய உலகில் மிகவும் எளிது... ஆனால், காணாமல் போனதை மீண்டும் உரியவர்களிடம் சேர்ப்பது மிக உயர்ந்த ஒரு கடமை. அதுவும், இத்தகைய உயர்ந்த கடமையைச் செய்த கையோடு எவ்வித விளம்பரமும், வெகுமதியும் தேடாமல் மறைந்த அந்த இளைஞர் உண்மையிலேயே மிக உன்னத மனிதர்தான். இத்தகைய மனிதர்கள் வாழும்வரை இவ்வுலகம் எத்தனை முறை காணாமல் போனாலும் மீண்டும் கண்டுபிடிக்கப்படும்.








All the contents on this site are copyrighted ©.