2014-01-21 16:02:36

புனிதரும் மனிதரே – நடமாடும் மறையுரை


அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், ஒரு நாள் ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று மறையுரையாற்றிவிட்டு வருவோம்" என்று கூறி, தன்னுடன் அழைத்துச் சென்றார். மறையுரையாற்றுவதற்கு தன்னை பிரான்சிஸ் அழைத்துச் செல்கிறார் என்று உணர்ந்த அந்த இளையவர் மிகவும் மகிழ்ந்தார். போகும் வழியில், அறுவடை செய்துகொண்டிருந்த பணியாளர்களுடன் பிரான்சிஸ் வயலில் இறங்கி வேலை செய்தார். இதைக் கண்ட இளம் துறவியும் வேலைகள் செய்தார். ஊருக்குள் நுழைந்த இடத்தில், ஒரு மரத்தின் மேலிருந்த கூட்டிலிருந்து கீழே விழுந்துகிடந்த ஒரு பறவைக் குஞ்சை, மரமேறி, மீண்டும் அந்தக் கூட்டில் வைத்துவிட்டு இறங்கினார் பிரான்சிஸ். ஊருக்குள் சென்றதும், அங்கு ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த ஒரு வயதானப் பெண்மணிக்கு பிரான்சிஸ் தண்ணீர் இறைக்க உதவினார். இப்படி நாள் முழுவதும், அவ்வூரில் இருந்த அனைவருடனும் சேர்ந்து பல பணிகள் செய்தார் பிரான்சிஸ்.
இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள் துறவகத்தை நோக்கிச் செல்லும்போது, இளையவர் பிரான்சிஸிடம், "மறையுரையாற்றத்தானே ஊருக்குள் சென்றோம். இப்போது ஒரு வார்த்தையும் சொல்லாமல் திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலை வெளியிட்டார். "நாம் தேவையான அளவு இன்று மறையுரையாற்றி விட்டோம். நமது செயல்கள் வார்த்தைகளைவிட சக்திவாய்ந்தவை. தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அசிசி நகர் புனித பிரான்சிஸ் அந்த இளையவரிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.