2014-01-21 17:29:02

திருத்தந்தை பிரான்சிஸ் : நம் ஆண்டவரின் மகத்துவத்தோடு உரையாடுவதற்கு நமது குழந்தை உள்ளத்தைப் பாதுகாக்கவேண்டும்


சன.21,2014. நாம் கடவுளோடு உரையாடுவதற்கு சிறியவர்களாகவும் தாழ்ச்சியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும், அதேசமயம், சிறியவர்களையும் தாழ்மையான இடத்தைக் கொண்டிருப்பவர்களையும் கடவுள் எப்போதும் தேர்ந்து கொள்கின்றார் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில், கடவுளுக்கும் அவர்தம் மக்களுக்கும் இடையே இருக்கும் தனியுறவு பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
நம் ஆண்டவரின் மகத்துவத்தோடு உரையாடுவதற்கு நமது குழந்தை உள்ளத்தைப் பாதுகாக்கவேண்டும் என்றும், கடவுள் எப்போதும் நம் பெயர்களைச் சொல்லி நம் நிலைக்கு வந்து நம்முடன் பேசுகிறார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.
நாம் எப்பொழுதும் வெளித்தோற்றத்தை அல்லது மக்களின் வல்லமையைப் பார்க்கத் தூண்டப்படுகிறோம், ஆனால் கடவுள் வித்தியாசமான கூறைக் கொண்டிருக்கிறார், இவ்வுலகில் வல்லமையுடையவர்களைக் குழப்பும் பலவீனமான மற்றும் மென்மையானவர்களை அவர் தேர்ந்து கொள்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, கடவுள் தாவீதைத் தேர்ந்துகொண்டது என்றுரைத்த திருத்தந்தை, குடும்பத்தில் சிறிய மகனாக இருந்த தாவீதைக் கடவுள் தேர்ந்துகொண்டார், அவர் தனது தந்தையால் ஆடுகளைப் பராமரிப்பதற்கு அனுப்பப்பட்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பின்னர் தாவீது அரசரானபோது இரு கடுமையான பாவங்கள் புரிந்தார், ஆயினும், அவர் தன்னைத் தாழ்த்தி, தனது சிறுமையை உணர்ந்து, தனது பாவத்தைக் கடவுளிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டி தவமும் செய்தார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ வாழ்வுக்கு தாழ்ச்சியும், கருணையும் அவசியம், ஏனெனில் இவை நமது குழந்தை உள்ளத்தைப் பாதுகாத்து கடவுளைப் பிரியப்படுத்துகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.