2014-01-20 16:15:05

திருத்தந்தையின் ஞாயிறு பங்குதள சந்திப்பு


சன.20,2014. உலகக் குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர் நாள் இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்டதையொட்டி உரோம் நகரின் மையப்பகுதியில் குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர்களுக்குப் பணியாற்றிவரும் இயேசுவின் திரு இதய பங்குதளத்திற்குச் சென்று புலம்பெயர்ந்தோர் பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வீடுகளற்ற ஏறத்தாழ 60 பேர், புலம்பெயர்ந்தோரின் ஏறத்தாழ 100 இளம்பிரதிநிதிகள் மற்றும் அவர்களுடன் பணிபுரிவோரை இப்பங்குதளத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை, அவரின் திரு அவை எப்போதும் புலம்பெயர்ந்தோருக்கு அருகாமையில் உள்ளது, ஏனெனில் திருஅவையும் இறையரசை நோக்கி பயணிக்கும் திருஅவையே எனவும் கூறினார்.
சலேசிய சபையால் நடத்தப்படும் இப்பங்குதள சந்திப்பின்போது, கடந்த ஓராண்டு கால அளவில் திருமுழுக்குப்பெற்ற குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும், புதிதாகத் திருமணமான தம்பதியரையும், இளம்குடும்பங்களையும் சந்தித்து ஆசீரை வழங்கினார் திருத்தந்தை.
இப்பங்குதள மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி திருத்தந்தை ஆற்றிய உரையில், இடம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை வரவேற்று வாழ்வளிக்கவேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையை வலியுறுத்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர் உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில், இவர் சந்திக்கும் நான்காவது பங்குதளமாகும் இது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.