2014-01-20 16:14:48

திருத்தந்தை : தீமையையும் பாவத்தையும் வெற்றிகொள்வது அன்பு ஒன்றே


சன.20,2014. தீமையையும் பாவத்தையும் வெற்றிகொள்வது அன்பு ஒன்றே என்பதை வாழ்ந்துகாட்டிய இறைவனின் ஆட்டுக்குட்டியாம் இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவோம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்' என்ற புனித திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளை மையமாக வைத்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் ஆட்டுக்குட்டியின் சீடர்கள், பகைமை, தற்புகழ்ச்சி போன்றவற்றை, அன்பாலும், தாழ்ச்சியாலும், பணிகள் மூலமாகவும் மேற்கொள்ளவேண்டும் என்றார்.
நம்மைப் பாவத்தளைகளிலிருந்து விடுவிக்க வந்த இயேசு, அவற்றை தன் தோள்களில் சுமந்துகொண்டார், அத்தோடு, அன்பின் மூலமே அனைத்தையும் வெற்றிகொள்ள முடியும் என்பதையும் கற்றுத்தந்தார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமைகளையும் பாவத்தையும் வெற்றிகொள்ள அனபைத்தவிர வேறுவழியில்லை எனவும் எடுத்துரைத்தார்.
வலிமையற்ற ஓர் ஆட்டுக்குட்டி, அனைத்துப்பாவங்களையும் தன் மேல் சுமந்து தன்னையே பலியாக்கியதன் மூலம் அன்பின் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புவோர், மறைவாயிருக்கும் ஊராய் இல்லாமல், மலைமேல் உள்ள வரவேற்பு நிறைந்த ஒளிர்விடும் நகராகத் திகழவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ், நாம் நம்மையே மூடிவைக்கும் குணத்தை மேற்கொள்ளாமல், இயேசுவைப் பின்பற்றுவதால் கிட்டும் விடுதலையையும் மகிழ்வையும் பிறருக்கு எடுத்துரைக்கும் சாட்சிகளாக நம் வாழ்வு மூலம் விளங்கவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.