2014-01-18 15:21:42

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சிறார் படைவீரர்கள்


சன.18,2014. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சிறார் படைவீரர்கள் தற்போது போரில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அந்நாட்டில் அதிகரித்துவரும் வகுப்புவாதச் சண்டையால் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் சண்டையிடும் எல்லாத் தரப்பினரும் சிறாரைத் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கின்றனர் எனவும், வறுமை, மனச்சோர்வு, பழிவாங்கும் ஆவல், வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் வழி தெரியாமை போன்றவை சிறார் படைப்பிரிவுகளில் சேர்வதற்கான காரணங்கள் எனவும் யூனிசெப் நிறுவனப் பேச்சாளர் Marixie Mercado ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
படைப்பிரிவுகளில் சிறுமிகள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுவதாக பல செய்தி அறிக்கைகள் கூறுவதையும் சுட்டிக் காட்டிய Mercado, அந்நாட்டில் ஓராண்டுக்கு முன்னர் செலேக்கா முஸ்லிம் தீவிரவாத அமைப்பு தொடங்கிய சண்டை தற்போது வலுவடைந்துள்ளது எனவும் கூறினார்.
இச்சண்டையில் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் ஏறக்குறைய பாதிப் பேருக்கு, அதாவது 22 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன, மேலும், ஏறக்குறைய 10 இலட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.